அற்புதம் நிகழ்த்திய அற்புதம்மாள்; 30 ஆண்டு அநீதி வீழ்த்தப்பட்டது!: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை.. தலைவர்கள் வரவேற்பு..!!

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. உச்சநீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. விடுதலையை வரவேற்று பேரறிவாளனை கட்டித்தழுவி உறவினர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர். அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டை இல்லத்தில் ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தனர். கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். தற்போது பேரறிவாளன் விடுதலை குறித்து தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில்,

காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்

பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஒரு முடிவு வந்திருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று கருத்து இல்லை. பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ராகுல், சோனியா ஏற்று கொள்வார்கள் என கூறியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். எந்த தவறும் செய்யாமல் இந்த இளைஞருடைய இளமைக்கால வாழ்க்கை சீர்குலைக்கப்பட்டுவிட்டது. 31 ஆண்டுகளாக 7 பேரும் துன்ப இருளில் வாடி வதங்கி விட்டார்கள்; இழந்ததை இனி அவர்கள் மீண்டும் பெற முடியாது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நீதியை நிலையாட்டியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பேரறிவாளன் விடுதலை போலவே மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

விசிக தலைவர் தொல். திருமாவளவன்:

பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதி வீழ்த்தப்பட்டது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு நிரபராதிக்கு எதிராக அநீதிக்கு காரணமானவர்களுக்கு சட்டம் என்ன தண்டனை வழங்கப் போகிறது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வாழ்விழந்து பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் மறுவாழ்வுக்கு ஒன்றிய அரசு என்ன செய்யப்போகிறது? எனவும் வினவியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை:

பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்கிறது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன்:

பேரறிவாளன் விடுதலை, எஞ்சிய 6 தமிழர்களை விடுவிக்கும் என தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 30 ஆண்டு சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி இது. பேரறிவாளன் விடுதலையை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்:

பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி தருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். உசிலம்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பேரறிவாளன் விடுதலை போலவே மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Related Stories: