×

பிப்.1ல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் தேர்வை எழுதலாம்

* மற்ற நாட்களில் கல்லூரிக்கு வரவேண்டும்
* உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி

விழுப்புரம்: பிப்ரவரி 1ல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைனில் தேர்வை எழுதலாம் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் ஊரடங்கு  குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், பள்ளிகளும், கல்லூரிகளும் பிப்ரவரி 1ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். ஆனால், கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு 1,3 மற்றும் 5வது செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி ஆன்லைனிலேயே நடைபெறும்.

எனவே, ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாட்களில் மாணவர்கள் வீட்டிலிருந்தே தேர்வு எழுதலாம். மற்ற நாட்களில் மானவர்கள் கல்லூரிகளுக்கு வர வேண்டும். கல்லூரிகளில் நடத்தப்படும் செய்முறைத் தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். கல்லூரிகள் திறப்பு என்பதை மாணவர்கள் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஆன்லைன் தேர்வுகளில் எந்தவித குளறுபடியும் இருக்காது. அத்தேர்வுகள் முறையாக நடைபெற்று முறையாக முடிவுகள் அறிவிக்கப்படும், கல்லூரிகளும் ஒழுங்காக  நடைபெறும்.

தமிழகத்தை பொறுத்தவரை இருமொழி கொள்கை என்பது இன்று, நேற்று உருவானது அல்ல, நீண்ட காலமாக இருக்கிறது.  அதனடிப்படையில் முதலமைச்சர்,  இருமொழி கொள்கையை பின்பற்றுவதில் மிக தீவிரமாக இருக்கிறார். அதை பின்பற்றுவோம். 3வது மொழி எந்த மொழியாக இருந்தாலும் படிப்பதில் எங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்றும் முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.

விரும்புகிற  மாணவர்கள், எந்த மொழியை வேண்டுமானாலும் அவர்கள் படித்துக்கொள்ளலாம் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிற காரணத்தால், இது எந்த மாநிலத்திற்கும் தவறு  இழைப்பதாக இருக்காது. வடமாநிலங்களில் எந்தவொரு  மாநிலத்திலாவது நம்முடைய தென்னிந்திய மொழிகளை அங்கே விருப்ப பாடமாக வைத்திருக்கிறார்களா? ஏதோ பேச வேண்டும் என்று ஆளுனர் பேசியிருக்கிறார். தமிழகத்தில் இருமொழி கொள்கை என்பது மாற்ற முடியாத ஒன்று. அதுதான் செயல்பாட்டில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Students can write the exam online from home even if the colleges open on Feb.1
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...