குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்; மகனை அடித்துக் கொன்று உடலை ஆற்றுக்குள் எரித்த பெற்றோர் கைது: சைக்கிளில் உடலை எடுத்து சென்றனர்

மதுரை: மதுரை, பெத்தானியாபுரம் பகுதி வைகை ஆற்றுக்குள், பாதி எரிந்த நிலையில் ஒரு ஆண் உடல் சாக்கினால் போர்த்தப்பட்டு கிடந்தது. நேற்று அதிகாலை ஆற்றுப்பகுதிக்கு வந்த சிலர் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். கரிமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு கேமராவில், ஒரு பெண், ஒரு ஆண் சேர்ந்து, சைக்கிளில் ஒரு உடலை ெகாண்டு சென்ற காட்சி பதிவாகியிருந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், சைக்கிளில் உடலை கொண்டு சென்றது, ஆரப்பாளையம் மறவர் தெருவைச் சேர்ந்த முருகேசன் (71), இவரது மனைவி வேணி (65) என்பது தெரியவந்தது. இவர்களை பிடித்து விசாரித்தபோது, இவர்கள் சைக்கிளில் கொண்டு சென்றது மகன் மணிமாறனின் (43) உடல் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில், கார் மெக்கானிக்கான மணிமாறன், திருமணமானவர், 3 குழந்தைகள் உள்ளனர். மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில், தினமும் குடித்து விட்டு வந்து, பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த மணிமாறன், பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த தந்தை முருகேசன், அருகில் கிடந்த இரும்புக்கம்பியால் மணிமாறனை தாக்கி கொன்றுவிட்டார். அதிர்ச்சியடைந்த முருகேசன் தம்பதி, அடையாளம் தெரியாமல் உடலை எரித்து விட முடிவு செய்து, ஒரு சைக்கிளில் மகனின் உடலை எடுத்து வைத்து, வைகை ஆற்றுக்கு  கொண்டு சென்று மண்ணெண்ணெயை ஊற்றி எரித்தது தெரிய வந்தது. முருகேசன், வேணியை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: