திருப்போரூரில் உள்ளாட்சி தேர்தல் பணி தொடக்கம்; பேப்பர் ஒட்டி கல்வெட்டுகள் மறைப்பு

திருப்போரூர்: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்பி வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களும், அவர்களுக்கு முன்மொழிபவர்களும் தாங்கள் போட்டியிடும் உள்ளாட்சி மன்றத்தில் சொத்து வரி, குடிநீர் வரி போன்றவை எதுவும் நிலுவை இல்லை என சான்றிதழ் பெற்று இணைக்கவேண்டும் என்ற விதி உள்ளது. இதையடுத்து நேற்று திருப்போரூர் பேரூராட்சியில், வரி பாக்கி எதுவும் இல்லை என சான்றிதழ் கேட்டு ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

இதனால் காலை முதலே திருப்போரூர் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களின் கூட்டம் காணப்பட்டது. இதனிடையே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, அரசு கல்வெட்டுகளை மறைக்கும் பணி நேற்று தொடங்கியது. திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன், சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஊழியர்களுடன் சென்று சிலைகளின் பீடங்களில் இருந்த கல்வெட்டுகள், அரசு விளம்பரங்களை பேப்பர் ஒட்டி மறைத்தனர். தேர்தல் நடைபெறும் பேரூராட்சி எல்லைக்குள் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3 பறக்கும் படைகள் அமைப்பு

திருப்போரூர் பேரூராட்சி தேர்தலையொட்டி 3 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. ஷிப்ட் முறையில் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை துணை வட்டாட்சியர் சத்யா தலைமையில் ஒரு பறக்கும் படையும், பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாலமன் ஜெரால்டு தலைமையில் மற்றொரு பறக்கும் படையும், இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் தலைமையில் மூன்றாவது பறக்கும் படையும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பறக்கும் படையிலும் ஒரு எஸ்எஸ்ஐ மற்றும் ஒரு போலீசார் இணைந்து செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: