நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, பாஜக தொகுதி பங்கீட்டில் குழப்பம்; பல மாவட்டங்களில் அதிமுக தனித்து போட்டி என்று அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் அதிமுக, பாஜக தொகுதி பங்கீட்டில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் அதிமுக தனித்து போட்டி என்ற அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநில நிர்வாகிகளுடன் அண்ணாமலை அவசர ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் சீட் ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு தொகுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதிமுக இதுவரை தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது. அப்போது வெளியேறியதற்காக பரபரப்பு குற்றாட்டை தேமுதிக அள்ளி வீசியது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று தேர்தலை சந்தித்தது. தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து அதிமுக மீது பாமக, பாஜக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியது. அதாவது, அதிமுகவினர் பாமக, பாஜக போட்டியிட்ட தொகுதியில் கூட்டணி தர்மத்துடன் தேர்தல் பணியாற்றவில்லை. தோல்வியடைய வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றினர் என்று அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. அதனால், அதிமுக கூட்டணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கூட்டணி தொடருமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்தது.

தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள ஒரே கட்சி பாஜக தான். ஆனால் இன்னும் அந்த கட்சியுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பாஜகவை கூட்டணியில் சேர்க்க அதிமுக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் பாஜகவை கூட்டணியில் சேர்த்ததால் தான் தோல்வியை சந்திக்க நேரிட்டது. சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்காமல் போனது என்றும் அதிமுக கருதுகிறது. இந்த நிலையில் நிறைய மாவட்டங்களில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் பாஜக மாவட்ட தலைவர்கள் தொடர்பு கொண்டால் போனை எடுப்பது இல்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக எந்த விஷயங்களிலும் பாஜகவை சேர்க்கவில்லை. ஆலோசனை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட அதிமுக செயலாளர் ஓ.எஸ்.மணியன் அனைத்து வார்டுகளிலும் அதிமுக தனித்து போட்டியிடும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இதே நிலை தான் பல மாவட்டங்களில் நீடித்து வருகிறது. இதனால், அதிமுக, பாஜக இடையே பிரச்னை முற்றியுள்ளது.

அதிமுகவில் இருந்து போன நயினார் நாகேந்திரன் போன்ற நிர்வாகிகள் தான் பாஜகவில் முக்கிய இடத்தில் இருந்து வருகிறார்கள். அப்படியிருக்கும் போது அவர்களிடம் நாங்கள் எப்படி பேச்சுவார்த்தை தொடங்க முடியும். அவர்களுக்கு இடங்களை கொடுத்து அவர்களை எப்படி வெற்றி பெற வைக்க முடியும் என்று அதிமுக கருதுகிறது. அது மட்டுமல்லாமல் பாஜகவில் இருந்து அதிமுகவை எதிர்க்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தரக்குறைவான வார்த்தைகளை பேசி வருகிறார்கள். அப்படியிருந்தால் அவர்களை கூட்டணியில் சேர்த்து எப்படி தேர்தலை சந்திக்க முடியும் என்று அதிமுக தலைவர்கள் நினைக்க தொடங்கியுள்ளனர். அது மட்டுமல்லாமல் தஞ்சாவூர் பள்ளி மாணவி இறந்த விவகாரத்தில் இறப்பை திசை திருப்பி பாஜக மத அரசியலாக்குகிறது. சிறுபான்மையினருக்கு எதிராக பிரச்னையை திசை திருப்பி வருகிறது. இது அதிமுகவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை அதிமுக ரசிக்கவில்லை. அரசியல் செய்ய வேண்டியது தான். ஆனால் மதத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று அதிமுக கருத்து தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, சட்டசபை தேர்தலில் சிறுபான்மையினரின் ஓட்டு அதிமுகவுக்கு கிடைக்கவில்லை. தஞ்சாவூர் மாணவி விவகாரத்தில் பாஜக எடுத்த முடிவால் இன்னும் அதிமுகவுக்கு பின்னடைவு தான் ஏற்படும் என்று அதிமுக தலைவர்கள் கருதுகின்றனர். இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை அதிமுகவில் வலுத்துள்ளது. அவர்களை சேர்த்து தேர்தலை சந்தித்தால் படுதோல்வியை தான் சந்திக்க வேண்டும் என்று அதிமுக தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக பேச ஓ.பி.எஸ்.ஸை பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்பு கொண்ட போது போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பாஜக தலைவர்களின் போன் கால் மற்றும் சந்திப்பை அதிமுக தலைவர்கள் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அதிமுக மாவட்ட செயலாளர்கள் பல மாவட்டங்களில் அனைத்து வார்டுகளிலும் அதிமுக போட்டியிடும் என்று அறிவித்து வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் அதிமுக இதுவரை பாஜகவை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிமுகவின் இந்த முடிவை அடுத்து தனித்து போட்டியிடலாமா? அல்லது அதிமுக அளிக்கும் வார்டுகளில் போட்டியிடலாமா? என்ற முடிவுக்கு வந்துள்ளது. இதனால், அதிமுக பாஜகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் இந்த முடிவை அடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த கூட்டத்தில் இதுவரை அதிமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்காதது. அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி உள்பட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக நேற்று வெளியிடுவதாக இருந்தது. இந்த குழப்பத்தால் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதை அதிமுக தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: