பகுப்பாய்வு மையத்தில் அலட்சியம் சுதந்திரமாக சுற்றும் கொரோனா நோயாளிகள்-அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகும் மருத்துவர்கள்

நாகர்கோவில் : ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரியில் மாத்திரைகள் வழங்காமல்  கொரோனா  நோயாளிகளை வெளியே அனுப்பி விடுவதால் தொற்று அதிகம் பரவி வருகிறது.

குமரியில்  கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த இரு நாட்களாக குறைந்தாலும் மருத்துவ  கல்லூரி அதிகாரிகள் அலட்சியத்தால் மீண்டும் அதிகம் பரவுமோ என்ற அச்சம்  எழுந்துள்ளது. குமரியில் கடந்த இரு நாட்கள் முன்பு  3,754 பேருக்கு சளி சோதனை செய்ததில்  804 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 329, ஆண் குழந்தைகள்  27,  பெண்கள் 408,  பெண் குழந்தைகள் 34 பேர் ஆவர்.

நாகர்கோவில் மாநகராட்சியில் கடந்த சில  வாரங்காளாக 300 க்கு மேல் தொற்று உறுதியான நிலையில், கடந்த இரு நாட்களாக  200க்கு கீழ் பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த இரு நாட்கள் முன்பு எடுத்த சோதனையில்,  124 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் 94  பேருக்கும்,  தோவாளையில் 86 பேருக்கும்,  தக்கலையில் 109, ராஜாக்கமங்கலம்  51,  குருந்தன்கோடு 81, திருவட்டாறு 129, மேல்புறம் 17, முஞ்சிறை 61  பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

இதற்கிடையே, தொற்று  உறுதியானவர்கள், ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி பகுப்பாய்வு யைத்தில்,  ஆக்சிஜன் லெவல், ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகள் முடித்து விட்டு, வீட்டு  தனிமைக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால், மாத்திரைகள் கேட்டால், இருப்பு  இல்லை. உள்நோயாளிகளுக்கு மட்டும்தான் மாத்திரைகள்  எனக் கூறிவிடுவதால், பலரும், ஆரம்ப சுகாதார மையங்கள் அல்லது தனியார் மருந்து கடைகளில் சென்று  வாங்குகின்றனர்.

 வீட்டு தனிமைக்கு அனுப்பியது குறித்து,  மாநகராட்சி அல்லது சுகாதாரத்துறைக்கு முறையாக தகவலும் தெரிவிப்பது இல்லை  எனக்கூறப்படுகிறது. இதனால், வெளியே வரும் தொற்றாளர்கள், மாத்திரைகள்  வாங்கும்போது, மருத்துவ ஊழியர்கள் மற்றும் பிற மக்களுக்கும் தொற்று பரப்ப  ஏதுவாகிறது.

கடந்த வாரம் வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார மையத்தில்,  இதுபோன்று வரிசையில் நின்ற 4க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் காரணமாக அங்கு  பணியாற்றிய 2 ஸ்டாப் நர்சுகள், 6 தடுப்பூசி பணியில் ஈடுபட்ட நர்சுகள்,  அங்கு பணியில் இருந்த மருத்துவர் ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில்  மினிகிளினிக்கில் பணியாற்றிய டாக்டர் மாற்றுப்பணியாக வந்துள்ளார்.  அவருக்கும் தொற்று உறுதியாகி தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தொற்று பாதித்தவர்கள், கபசுர குடிநீர் போன்ற ஆயுர்வேத மருந்துகளுக்காக கோட்டாறு ஆயுர்வேத மருத்துவ  கல்லூரிக்கும் வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம்  18 பயிற்சி மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும், நிதியாண்டு முடிவடைய உள்ளதால், முத்துலெட்சுமி ரெட்டி  திட்டத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு, நிலுவையில்  உள்ள தொகை கண்டறிந்து வழங்குவதும், கிராம செவிலியர்களே செய்கின்றனர்.  

தற்போது, தொற்று காரணமாக அந்த பணியும் பாதிக்கப்பட்டு, பலருக்கு நிதி உதவி  கிடைக்காத சூழலும் எழுந்துள்ளதாக சம்மந்தப்பட்ட நர்சுகள் மத்தியில்  புகார்கள் எழுந்துள்ளன.

எனவே மருத்துவ கல்லூரியிலேயே, அசித்ரோ  மைசின், விட்டமின் சி மாத்திரைகள், பாரசிட்டமால் மற்றும் அலர்ஜி  மாத்திரைகள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை  எழுந்துள்ளது.

மாவட்ட வனஅலுவலர் உள்பட 9 பேருக்கு தொற்று

நாகர்கோவில் வடசேரியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் எடுக்கப்பட்ட சளி மாதிரிகளில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் 8 பேர் என மொத்தம் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அங்கு கிருமிநாசினி தெளித்து, அலுவலகத்தை தற்காலிகமாக மூடினர். தொடர்ந்து, அனைவரும் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டனர். மேலும், அவர்களின் வீடுகளில் உள்ளவர்களுக்கும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

Related Stories: