சுட்டெரிக்கும் வெயிலிலும் மிதமான தண்ணீர் திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்

குலசேகரம் : குமரி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா தலமாக திற்பரப்பு அருவி விளங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் கோதையாறு இங்கு அருவியாக விழுகிறது. கோதையாற்றில் குறிப்பிட்ட சீசன் என்றில்லாமல் ஆண்டின் பெரும்பாலான நாட்களும் தண்ணீர் பாய்வதால், திற்பரப்பு அருவியிலும் எப்போதும் தண்ணீர் கொட்டுகிறது.

கடந்த ஆண்டு கொரொனா ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்கள் சுற்றுலா முடங்கி கிடந்தது. தற்போது கொரொனா பரவலை தடுக்கும் வகையில் சில கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்ததால் கோதையாறு கரைபுரண்டு ஓடியது. இதனால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

தற்போது கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் கோதையாற்றில் குறைந்த அளவே தண்ணீர் வருவதால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் நீர் நிலை சார்ந்த சுற்றுலா தலங்களை நாடுகின்றனர். இதனால் கொரொனா கட்டுப்பாடுகள் மத்தியிலும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். பிற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் திற்பரப்பு பகுதி மரங்கள் அடர்ந்த சோலைவனம் போல் காட்சியளிப்பதால் வெயிலின் தாக்கம் குறைவாக உள்ளது. அருவியில் குளிர்ச்சியான நீரில் பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

இதேபோன்று அருவியின் மேல்பகுதியிலுள்ள திற்பரப்பு தடுப்பணையில் நடைபெறும் உல்லாச படகு சவாரியிலும் பயணிகள் ஆர்வமுடன் ஈடுபடுகின்றனர். வெயில் காலம் என்பதால் பயணிகள் விரும்பும் பழவகைகள், இளநீர், நுங்கு போன்றவை விற்பனை செய்யும் கடைகள் புதிது புதிதாக தோன்றியுள்ளன.பகலில் சுட்டெரிக்கும் வெயில் கொழுத்திய நிலையில் நேற்றுமுன்தினம் மாலை நேரத்தில் வெயில் மங்கி வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. அதோடு திடீரெனெ மழை பெய்தது. இந்த மாலை நேர மழையால் குளுகுளு என இதமான காலநிலை நிலவியது.

மலையோர பகுதியில் சாரல்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. நேற்று காலையும் சாரல் மழை காணப்பட்டது. சிற்றார்-1ல் 4.8, பேச்சிப்பாறை 5.4, சுருளோடு 3, பாலமோர் 2.4 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 46.99 அடியாகும். அணைக்கு 239 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது.

221 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 47.80 அடியாகும். அணைக்கு 345 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 775 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 16.89 அடியாக நீர்மட்டம் உள்ளது. சிற்றார்-2ல் 16.99 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 32.60 அடியாக நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 33.55 அடியாகும். முக்கடல் அணை நீர்மட்டம் 22.10 அடியாகும்.

Related Stories: