திருப்பூரில் அட்டகாசம்; மயக்க ஊசியில் சிக்கிய சிறுத்தை வால்பாறை வனத்தில் விடுவிப்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே அவினாசியை அடுத்த சேவூர் பாப்பாங்குளம் பகுதியில் விவசாய தோட்டத்தில் சோளதட்டை அறுத்துக்கொண்டிருந்த வரதராஜன் மற்றும் மாறன் ஆகியோரை கடந்த 24ம் தேதி அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கியது. இதன் பின்னர் அன்றே சிறுத்தை தேட சென்ற வெங்கடாசலம், மோகன்குமார் ஆகியோரையும் சிறுத்தை தாக்கியுள்ளது. தேடுதல் வேட்டையின்போது வனசரக வேட்டை தடுப்பு காவலர் மணிகண்டன் என்பவரை சிறுத்தை தாக்கியது.

நேற்று காலை 8.15 மணிக்கு அம்மாபாளையம் பகுதியில் வேஸ்ட் குடோன் ஒன்றில் சிறுத்தை பதுங்கியிருந்தது. இதனை அறியாமல் அந்த பகுதிக்கு சென்ற ராஜேந்திரன் (50) என்ற காவலாளியை சிறுத்தை தாக்கியது. இதை தொடர்ந்து வனத்துறையினர், வன மருத்துவர்கள் மற்றும் அவினாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் அம்மாபாளையம் வந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். வேஸ்ட் குடோனில் பதுங்கிருந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் சுற்றிவளைத்தனர்.

அப்போது வன ஊழியர்கள் சிவக்குமார், தனபால், பிரவீன் ஆகியோரை தாக்கிவிட்டு சிறுத்தை தப்பியோடியது. இதைத்தொடர்ந்து அம்மாபாளையம் அருகே உள்ள கஸ்தூரிபாய் வீதியில் உள்ள புதரில் சிறுத்தை பதுங்கியது.  இததைத்தொடர்ந்து துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர். உடனே அந்த பகுதிக்கு வனத்துறை வாகனம் கொண்டுவரப்பட்டு, கூண்டில் சிறுத்தை அடைக்கப்பட்டு, வால்பாறை காடம்பாறை அடுத்துள்ள அப்பர் ஆழியாறு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டது. நேற்று பிடிபட்டது ஆண் சிறுத்தை எனவும், 3 முதல் 4 வயது வரை இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: