டெல்டாவில் விடிய விடிய மழை: 2,000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

திருச்சி: குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. டெல்டா பகுதியிலும் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் நாகை, வேளாங்கண்ணி, நாகூர், வேதாரண்யம், கீழ்வேளூர் பகுதியில் நேற்று நள்ளிரவு 11 மணி முதல் இன்று காலை வரை பலத்த மழை பெய்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன்பிறகு சாரல் மழை பெய்தது. இன்று காலை முதல் சீர்காழி, பூம்புகார், கொள்ளிடம், தரங்கம்பாடி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு 9 மணி முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுகை, விராலிமலை, இலுப்பூர், பொன்னமராவதி பகுதியில் நேற்று இரவு 9 மணி முதல் மிதமான மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி, மணப்பாறை, துறையூர், முசிறி, தா.பேட்டை துவரங்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

நாகையில் கொள்ளிடத்தில் 5ஆயிரம் ஏக்கர் உள்பட 30,000 ஏக்கர், மயிலாடுதுறையில் 30,000 ஏக்கர், திருவாரூரில் 52,000 ஏக்கர், தஞ்சையில் 60,000 ஏக்கர், பெரம்பலூர் மாவட்டத்தில் நெற்பயிர், பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம், மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்த 2,000 ஏக்கரில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அரியலூர் மாவட்டத்தில் 60,000 ஏக்டேரில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 500 ஏக்கர் தாளடி என டெல்டாவில் 2லட்சத்து 34 ஆயிரத்து 500 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

1.50 லட்சம் மீனவர்கள் தொடர்மழையால் நாகையில் இன்று 5வது நாளாகவும், வேதாரண்யத்தில் 7வது நாளாகவும், மயிலாடுதுறையில் 4வது நாளாகவும், திருவாரூர் மாவட்டத்தில் 4வது நாளாகவும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. டெல்டா முழுவதும் 1.50 லட்சம் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால், பல இடங்களில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

கலெக்டர் அலுவலகம் மழை காரணமாக கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தென்பெண்ணை ஆற்றின் தரை பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில், வீர ஆஞ்சநேயர் கோயில்களில் தண்ணீர் புகுந்தது. மேலும் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதி அடைந்தனர். மாவட்டம் முழுவதும் 5ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்கள் தண்ணீரில் மூழ்கி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் இன்று அதிகாலை வரை மீண்டும் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. பாபநாசத்தில் 91 மில்லி மீட்டரும் மணிமுத்தாறில் 84 மிமீ மழையும் கொட்டி தீர்த்தது.

Related Stories: