வேதா இல்லம் எங்களுக்கு கோவில்!: ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு செய்யும்...வேதனையில் எடப்பாடி பழனிசாமி..!!

சேலம்: முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு விநியோகத்தை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட வேண்டும் என்ற நோக்கிலேயே அதனை நினைவு இல்லமாக மாற்றப்பட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இதனை எதிர்த்து நிச்சயம் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் வேதா இல்லம் நிச்சயம் மீட்டெடுக்கப்படும் அவர் உறுதியளித்திருக்கிறார். அன்வர் ராஜா குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி, அதிமுக ஜனநாயக முறைப்படி நடத்தப்படும் கட்சி என்பதால் அனைவரது கருத்துக்களும் கேட்கப்படும் என்றும் தேவையில்லாத கருத்துக்கள் நிராகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அம்மா கிளினிக் தொடர்ந்து செயல்பட திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்களை நிறுத்தக்கூடாது என்று கூறியிருக்கிறார்.

Related Stories: