விளைநிலங்களில் ‘விளையாடும்’ காட்டுயானைகள் விவசாயப்பணிக்கு செல்ல வேண்டாம்-கொடைக்கானல் விவசாயிகளுக்கு கோரிக்கை

கொடைக்கானல் : கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள், தொடர்ந்து விவசாய நிலங்களில் புகுந்து விளைபயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான நடுப்பட்டி, பள்ளத்து கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் பல நாட்களாக யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து வாழை, காபி, பலா உள்ளிட்ட பயிர்களை அழித்து வருகிறது.

இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். காட்டுயானைகள் விவசாய பயிர்களை நாசம் செய்வதை கண்டித்து, நேற்று முன்தினம் விவசாயிகள் பள்ளத்து கால்வாய் பகுதியில் மறியல் செய்ய முயன்றனர். கொடைக்கானல் கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.இந்நிலையில், நேற்று மாலை நடுப்பட்டி பள்ளத்து கால்வாய் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் யானைகள் முகாமிட்டு அங்குள்ள விளைபயிர்களை அழித்தன. கீழ்மலைப் பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க இப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட வனத்துறை அலுவலர் பிரபு உத்தரவின்பேரில், காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் முயற்சி எடுத்துள்ளனர். முதற்கட்டமாக நடுப்பட்டி மற்றும் பள்ளத்து கால்வாய் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், விவசாய பணிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் யானைகளை வனத்துறையினர் காட்டிற்குள் விரட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மைக் மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Related Stories: