அரியாறு கரை உடைந்து திருச்சி மாநகருக்குள் புகுந்தது வெள்ளநீர்

* பொதுமக்கள் மாடிகளில் தஞ்சம்

* திருச்சி-திண்டுக்கல் சாலை துண்டிப்பு

* பெருக்கெடுத்த காட்டாறால் மூழ்கியது தீரன்நகர்

திருச்சி : திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியில் அரியாறு தலைப்பு தொடங்குகிறது. அங்கிருந்து தொடங்கி பொன்னணியாறு அணை பகுதியிலிருந்து மணப்பாறை, பள்ளிவெள்ளி மூக்குஒடை பகுதியில் இருந்து வரும் அரியாறு அரியாவூர் வழியாக புங்கனூர், தீரன்நகர் வழியாக கோரையாற்றில் இணைந்து காவிரியில் கலக்கிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அரியாற்றில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்களாக தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரியாற்றில் இருகரையை தொட்டு தண்ணீர் வந்தது. புங்கனூர்-தீரன்நகர் இடையே அரியாற்று நீர் கரைகளை கடந்து தண்ணீர் வெளியேறி ஊருக்குள் புகுந்தது. இதனால் இனியானூர் கிராமத்தில் அரியாற்று கரையோர பகுதியில் சுற்றியுள்ள குடியுருப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதில் இனியானூர், பிராட்டியூர் மேற்கு பகுதியில் உள்ள முருகன் நகர், வர்மா நகர் தெற்கு ஆகிய பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்தது. திடீரென வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீரால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். தண்ணீர் மீண்டும் அதிகரிக்குமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று புங்கனூர்-அல்லித்துறை இணைப்பு பாலப்பகுதியில் உள்ள அரியாற்றில் காரையோரத்தில் தண்ணீர் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மணல் மூட்டைகள் வைத்து அடுக்கப்பட்டது. இதனை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆலோசனையும் நடத்தினர். அதிகாரிகள் சென்ற சிறிது நேரத்தில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்ட இடத்தில் உடைப்பு ஏற்பட்டு, வயல்களில் வெள்ளநீர் புகுந்தது. சுமார் சுமார் 100 அடிவரை காரைகளை அரித்துச்செல்லப்பட்டது.

இதனால் தொடர்ந்து தண்ணீர் வயல்களில் வெளியேறி வருவதால் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது. இதில் பயிரிடப்பட்ட நெற்பயிற் உள்ளிட்ட பயிர்களும் தண்ணீரில் மூழ்கி நாசமானது. மேலும் தண்ணீர் விரைந்து வடிய புங்கனூர்-அல்லித்துறை இணைப்பு சாலையை ஊராட்சி நிர்வாகத்தினர் பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்துவிட்டனர். இதனால் புங்கனூர்-அல்லித்துறை இடையே போக்குவரத்தும் முற்றிலுமாக தடைபட்டது. தண்ணீர் வரத்து குறைந்தால் மட்டுமே உடைந்த கரையை அடைக்க முடியும் என்ற சூழல் நிலவுகிறது.

அரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நேற்று பிற்பகலில் தீரன்நகர் பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் தரையோடு தரையாக கட்டப்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அங்குள்ள மாடிகளிலும், உறவினர் வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். முழங்கால் வரை தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்ப்டடுள்ளது.

தண்ணீர் தீவு போல் காட்சி அளித்து வருகிறது. மேலும் திருச்சி-திண்டுக்கல் சாலையில் பிராட்டியூர் முதல் தீரன்நகர் வரை சாலையை மூழ்கடித்து தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதன்காரணமாக திண்டுக்கல்லிருந்து திருச்சி நோக்கி வரும் வாகனங்கள் வண்ணாங்கோவில் பகுதியில் தடுக்கப்பட்டு, பூங்குடி வழியாக திருப்பி விடப்படுகிறது. இந்த வழியாக வரும் வாகனங்கள் மணிகண்டத்தில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை இணையும். அங்கிருந்து திருச்சிக்கு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும்படியாக தற்காலிகமாக சாலைவழியானது மாற்றப்பட்டது.

இதே போல் ராம்ஜிநகர் பகுதியில் இருந்து திருச்சி நகருக்குள் வரும் வாகனங்கள் பிரட்டியூர் பிரிவு பகுதியில் போலீசார் தடுத்து ஒருவழிப்பாதையாக எதிர் திசையில் (திருச்சியிலிருந்து திண்டுக்கல் வரும் வழி) செல்ல அறுவுறுத்தி வருகின்றனர்.

மேலும் திருச்சி மாநகரில் உய்யக்கொண்டான், கோரையாற்றிலும் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் வயலூர் சாலையில் சண்முகாநகர், குமரன்நகர், உறையூர் பகுதிகளில் மழைநீர் வீடுகளில் புகுந்துவிட்டது. சாலைகள் குளம் போல் காட்சி தருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வீடுகளை காலி செய்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்க்கால் மாயம்

திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் தீரன்நகர் முதல் ராம்ஜிநகர் வரை சாலையோரத்தில் வடிகால் வாய்க்கால் இருந்தது. மழைக்காலங்களில் இந்த வாய்க்கால் வழியாக தண்ணீர் சென்று ஆற்றில் கலந்துவிடும் நிலை இருந்தது. இந்நிலையில் இந்த சாலையில் ஓரத்தில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் தற்போது அமைந்துள்ளது. இப்படி அமைக்கப்பட்ட வணிக நிறுவனங்கள் வாய்க்காலை ஆக்கிரமித்து மணற்கொண்டு மூடி தங்கள் நிறுவனத்திற்கு பாதை அமைத்துள்ளனர்.

சிலர் கடமைக்கு சிறிய பாலங்களை அமைத்து பாதை ஏற்படுத்தியுள்ளனர். இந்த வாய்க்கால் ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது திண்டுக்கல் சாலையில் மழைநீர் சூழ்ந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இனியாது மாநகராட்சி நிர்வாகம் வாய்க்கால் ஆக்கிரமிப்பை மீட்டு தண்ணீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்துமா என எதிர்பார்க்கின்றனர்.

மழை நின்றால் மட்டுமே...

அரியாறில் தொடர்ந்து தண்ணீர் வருதால் உடைப்பை சரிசெய்வது சாத்தியமாகாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தீரன்நகர், குமரன்நகர் உள்ளிட்ட தண்ணீர் தேங்கிய பகுதிகளில் இருந்து தண்ணீர்வெளியறே வேண்டுமெனில் கோரையாறு, உய்யக்கொண்டான், அரியாறு ஆகிய ஆறுகளில் வரும் வெள்ளநீரும் குறைய வேண்டும், மழையும்நிற்க வேண்டும் என்ற நிலை நிலவுகிறது. இதனால் மாநகரில் நிலமை சீராக 10 நாட்களுக்கும் மேலாகும் என தெரிகிறது.

வீடு இடிந்தது

திருச்சி மாநகரில் தாராநல்லூர் பகுதியில் உள்ள காமராஜர் நகரில் அஞ்சலை என்பவர் செம்மண் சுவற்றில் அமைந்த ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் தற்போது பெய்த தொடர் மழையால் நேற்று காலை திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழுவதுமாக பொக்லைன் இயந்திரம் மூலம் வீடு இடிக்கப்பட்டது. இதனால் அஞ்சலை வாழ்வாதாரம் இழந்து வீடின்றி தவித்து வருகிறார்.

பாலம் இடிந்தது

திருச்சி புத்தூர் கலிங்கு பகுதியில் ஆறுகண் பாலப்பகுதியில் கோரையாறு, உய்யக்கொண்டான் ஆறுகளில் தண்ணீர் செல்வதை பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கண்டுகளித்து செல்கின்றனர். இதனால் அந்த பகுதி தற்காலிக சுற்றுத்தலமாக மாறியுள்ளது. மேலும் புத்தூர் கலிங்கு பகுதியில் இருந்து திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்தது.

வெடித்த மின் டவர்

அரியாற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து புங்கனூர் வரும் சாலையில் ஒருவருடைய வயலில் இருந்து உயர்கோபுர மின்கம்பத்தில் திடீரென குண்டு வெடித்தது போன்று தீப்பொறியுடன் வெடித்தது. இதனால் அங்கிருந்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் அளித்தனர். அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Related Stories: