போக்குவரத்துக்காக சாலையாக பயன்படுத்திய வரத்து வாய்க்கால் வெள்ளநீரால் மீண்டும் வரத்து வாய்க்காலானது

பெரம்பலூர் : பெரம்பலூர் செங்குணம் கைகாட்டி பாலத்தின் கீழே போக்குவரத்துக்காக சாலையாக பயன்பட்டு வந்த வரத்து வாய்க்கால் வெள்ளநீரால் மீண்டும் வரத்து வாய்க்காலானது.

பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் கைகாட்டி பகுதியில் 3 ஆண்டுகளுக்கு முன் அடிக்கடி நிகழ்ந்த விபத்துகள் காரணமாக செங்குணம் கைகாட்டி சாலை வழியாக எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாதபடி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சிமெண்ட் திண்டுகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

இதனால் அரசு பஸ்கள் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலையில் எளம்பலூர் தண்ணீர் பந்தல் வரை சென்று மீண்டும் திரும்பி செங்குணம் கைகாட்டி வந்தடைந்து, செங்குணம் வழியாக சிறுகுடல், கீழப்புலியூர், கே-புதூர் முருகன்குடி, நமையூர், ஆய்க்குடி, பீல்வாடி பொன்னகரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று வந்தன.

இதனிடையே மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கார், ஆட்டோ உள்ளிட்ட சிறிய அளவிலான நான்கு சக்கர வாகன ஓட்டிகள், மஞ்சள் நிற மூன்று சக்கர ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளின் வசதிக்காக தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் கைகாட்டி பாலத்தின் கீழே ஏரிக்கு நீர் செல்லும் வரத்து வாய்க்காலையே பாதையாக்கி அதில் சென்று வரும்படியாக தற்கால பாதை வசதி ஏற்படுத்தித் தரப்பட்டிருந்தன. அதன்பின் செங்குணம் கைகாட்டி பகுதியில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக, உயர்கோபுர மின்விளக்கு, சாலையில் ஒளிரும் மின்விளக்கு, சிக்னல் விளக்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்குப்பருவ மழை காரணமாக எளம்பலூர் ஏரி நிரம்பி திருமங்கலியம்மன் கோவில் ஓடை வழியாக தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் கைகாட்டி பாலத்தின்கீழ் 133 ஏக்கர் பரப்பளவு கொண்ட செங்குணம் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் பாலத்தினுள் சென்று கொண்டிருந்த வாகன போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்ளது. மீண்டும் பழையபடி தண்ணீர்பந்தல் வரை சென்று சுற்றி வருகின்றன. ஏரிக்கான நீர்வரத்து நிற்கும் வரை செங்குணம் கைகாட்டி பாலத்தின் கீழுள்ள வரத்து வாய்க்காலில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

Related Stories:

More