வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் கனமழை எண்ணமங்கலம் ஏரி நிரம்பி நீர் வெளியேறுவதால் சாலைகள் துண்டிப்பு

அந்தியூர்:  ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர், வரட்டுப்பள்ளம் அணை  பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. ஈரோடு  மாவட்டத்திலேயே இங்குதான் அதிகபட்சமாக 142 மில்லி மீட்டர் மழை  பெய்ததுள்ளது. ஏற்கனவே வரட்டுப்பள்ளம் அணை நிரம்பிய நிலையில் 1200 கன அடி  உபரிநீர் வெளியேறியதால் எண்ணமங்களம் ஏரியும் நிரம்பியது.  எண்ணமங்கலம்  ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரால் செல்லம்பாளையம், பாரதி நகர் வழியாக  எண்ணமங்கலம் செல்லும் சாலையின் தரைப்பாலம் மழைநீர் சென்றதால் ரோடு  துண்டிக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மூலக்கடை  வழியாக கெட்டி சமுத்திரம் ஏரிக்கும், குருநாதசாமி வனக் கோயில்,  புதுப்பாளையம் வழியாக வரும் மழைநீர் அந்தியூர் ஏரிக்கும் சென்று  கொண்டுள்ளது. இப்பகுதிகளில் பள்ளங்களின் வழியாக ஏரிக்கு தண்ணீர் செல்வதால்  ரோடு சில இடங்களில் அரிப்பு ஏற்பட்டு துண்டிக்கப்பட்டுள்ளது.

3  ஆண்டுகளுக்கு பிறகு பள்ளங்களில் செல்லும் மழை நீர் பாலங்கள், ரோட்டுகளை  மூழ்கடித்தபடி செல்வதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வேடிக்கை பார்க்க திரண்டனர்.  மழை வெள்ள நீர் பாதிப்பை ஏற்படுத்திய பகுதிகளை பொதுப்பணித்துறை  செயற்பொறியாளர் ரவி மற்றும் கோபி கோட்டாட்சியர் வட்டாட்சியர் விஜயகுமார்  ஆகியோர் பார்வையிட்டனர். இப்பகுதிகளில் செல்லும் மழை வெள்ள  நீரால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக அந்தியூர்  போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டனர். சென்னம்பட்டி அருகேயுள்ள ஜரத்தல் வனப்பகுதி  மன்னாதன்குட்டையில் உள்ள தடுப்பணை உடைந்தது. இதில் இருந்து வெளியேறிய  வெள்ளநீர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து, விவசாய  பயிர்களுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தியூர்,பர்கூர்  பகுதியில் பெய்யும் கனமழையால் வரட்டுப்பள்ளம் அணை, எண்ணமங்கலம் ஏரி  நிரம்பியுள்ள நிலையில் விரைவில் கெட்டி சமுத்திரம் ஏரியும் நிரம்பும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: