வாசுதேவநல்லூர் அருகே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான பொருட்கள் கண்டுபிடிப்பு: சாலை அமைக்க மண் தோண்டிய போது கிடைத்தது

சிவகிரி: வாசுதேவநல்லூர் அருகே சாலை அமைக்க மண் எடுத்த போது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள திருமலாபுரம் கிராமம் குலசேகரப்பேரி குளத்துக் கரையின் வடபகுதியில், எஸ்டி சேம்பர் மற்றும் எஸ்டி கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தங்கப்பழத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்நிலத்திற்குச் செல்வதற்காக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக அப்பகுதியில் மண் எடுத்த போது 4 அடி ஆழத்தில் உருளைக் கற்கள் கிடந்தன. தொடர்ந்து தோண்டி மீண்டும் மண் எடுத்த போது பழங்கால மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழிகள், இரும்பால் செய்யப்பட்ட வில், குத்தீட்டி, வாள், கத்தி, செம்பினால் செய்யப்பட்ட பாத்திரங்கள் புதைந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து பழங்கால பொருட்கள் அனைத்தும் பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டன.

இதுபற்றி தகவலறிந்த குற்றாலம் தொல்லியல் துறை அலுவலர் ஹரி கோபாலகிருஷ்ணன், பழமையான பொருட்கள் கிடைத்த பகுதியை நேரில் பார்வையிட்டார். அங்கு கிடைக்கப் பெற்ற பண்டைய கால பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பழங்கால பொருட்கள் கிடைத்தது பற்றி அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை பெற்று அடுத்தக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஹரி கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

பழங்கால பொருட்கள் அனைத்தும், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என கூறப்படுகிறது.

அனைத்துப் பொருட்களும் வேலை நுணுக்கம் மிக்கவையாக உள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் நாகரீக வாழ்க்கை துல்லியமாக வெளிப்படுகிறது. ஏற்கனவே இப்பகுதியில் ஆற்றோரங்களில் பண்டைய கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என செவி வழிச்செய்திகள் கூறப்பட்டு வருகிறது. இதனை உண்மையாக்கும் வகையில் தற்போது பண்டையகால பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. எனவே இப்பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்த மக்களின் வாழ் க்கை முறையை வெளிப்படுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: