வேலூர் மாநகரின் முக்கிய நீராதாரம் பரவலாக மழை பெய்தும் வறண்டு கிடக்கும் ஓட்டேரி: நீர்வரத்து கால்வாய்களை தூர்வார கோரிக்கை

வேலூர்: வேலூர் மாநகரின் முக்கிய நீராதாரமாக உள்ள ஓட்டேரி நீரின்றி வறண்டு கிடக்கிறது. மேலும், நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் சமீபமாக அவ்வப்ேபாது மழை பெய்து வருகிறது. அதேபோல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால், அந்த மாநிலங்களில் உள்ள அணைகள் நிரம்பி வழிந்து, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாலாற்றில் செல்லும் வெள்ளம் திருப்பி விடப்பட்டு பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வருகின்றன. இதில், வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் 42 ஏரிகள் நிரம்பி உள்ளன.

தற்போதும், பாலாற்றில் 1,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், பாலாற்றில் வெள்ளம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோல், நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில், ஆங்கிலேய ஆட்சி காலத்தில் 55 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட வேலூர் மாநகரின் முக்கிய நீராதாரமான ஓட்டேரி தண்ணீரின்றி வறண்டு காட்சியளிக்கிறது. இதனால், கோடைக்காலத்தில் வேலூர் மாநகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி ஓட்ேடரிக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டேரிக்கு, நாயக்கனேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழையால் ஏற்படும் நீருற்று கால்வாய்கள் மூலம் தண்ணீர் வருகிறது. ஓட்டேரியை சுற்றியுள்ள கிராமங்களின் விவசாயம், வேலூர் மாநகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் ஓட்டேரி முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழையின்போது, நீர்வரத்து அதிகரித்ததால் ஓட்டேரி முழு கொள்ளளவை எட்டியது. மேலும், உபரிநீரும் வெளியேற்றப்பட்டது. பிறகு 6 ஆண்டுகள் ஆகியும் ஓட்டேரி நிரம்பவில்லை.

நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாதே இதற்கு காரணம். மேலும், சில இடங்களில் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாய்களை தூர்வாரி  ஓட்டேரி நிரம்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: