ஏலகிரியில் மலைபோல் குவிந்த குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு: உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்து துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால், மாற்று இடம் அமைத்து குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இது 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. மேலும், இங்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் வெளியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக 100க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகள் உள்ளன. இதுமட்டுமின்றி பொதுமக்கள் அன்றாடம் உபயோகப்படுத்தும் குப்பை கழிவுகள் ஓரிடத்தில் கொட்டப்பட்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றப்படுகின்றன.

தற்போது ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளை எருவாக உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. மக்கா குப்பைகளை வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்து அவைகள் எரிக்கப்பட்டு மறுசுழற்சி முறையில் பல்வேறு உற்பத்தி பொருட்கள் செய்கின்றன. இந்நிலையில், ஏலகிரி மலையில் உள்ள மஞ்சக்கொல்லை வட்டம் பகுதியில் பல தோட்டம் உள்ளது. இதன் அருகே 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், விவசாய நிலங்கள் குடிநீர் கிணறுகள் போன்றவை உள்ளன. இங்கு அரை ஏக்கர் பரப்பில் 20 அடி ஆழம் பள்ளம் தோண்டி ஏலகிரி மலை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி குவித்து வருகின்றனர். இதனால், சுற்றுப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

மேலும், தங்கும் விடுதிகளின் மீன் கோழி இறைச்சி, குப்பை கழிவுகள் ஆகியவற்றை அழுகிய நிலையில் டிராக்டர் மூலம் கொண்டு வந்து இங்கு கொட்டப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பை கொட்ட மாற்று இடத்தை ஏற்படுத்தி அப்பகுதியில் குப்பைகளை தரம் பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>