இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர் உடல் புதுகை வந்தது: அமைச்சர், கலெக்டர் அஞ்சலிக்குப்பின் அடக்கம்

அறந்தாங்கி: இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர் உடல், புதுக்கோட்டைக்கு நேற்று வந்தது. அமைச்சர், கலெக்டர் நேரில் அஞ்சலி செலுத்தியபின் அடக்கம் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18ம் தேதி மீன்பிடிக்க சுகந்தன், சேவியர், ராஜ்கிரண் ஆகியோர் சென்ற விசைப்படகு மீது இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலால் மோதினர். இதில் விசைப்படகு கடலில் மூழ்கி நீரில் தத்தளித்த சுகந்தன், சேவியர் ஆகியோரை இலங்கை கடற்படையினர் மீட்டு கைது செய்தனர். இதில் உயிரிழந்த ராஜ்கிரண் சடலத்தை மீட்டனர்.

இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்தும், உயிரிழந்த மீனவரின் உடலை மீட்டு கொண்டுவரவும், கைதானவர்களை விடுவிக்கவும் வலியுறுத்தி புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, ராமநாதபுரம், திருவாரூர், மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கோட்டைப்பட்டினத்தில் கடந்த 3 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக ஜெகதாப்பட்டினம் மீனவர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படையிடமிருந்து, மீனவர் ராஜ்கிரண் உடலை சர்வதேச எல்லையில் வைத்து சக மீனவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று இந்திய கடலோர காவல்படை நேற்றுமுன்தினம் இரவு அறிவித்தது.

அதன்படி மீனவரின் உடலை பெற்றுக்கொண்டனர். பின்னர் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 2 விசைபடகுகளில் சென்ற 9 மீனவர், 2 மீன்வளத்துறை அதிகாரிகள் என 11 பேர் கொண்ட குழுவினரிடம் நேற்று காலை மீனவர் உடல் ஒப்படைக்கப்பட்டது. பிற்பகல் 1.20 மணிக்கு கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்திற்கு மீனவர் உடல் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து கோட்டைப்பட்டினத்தில் குவிந்திருந்த சக மீனவர்கள் மற்றும் ராஜ்கிரணின் குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுததோடு மலர்தூவி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தமிழக அரசு அறிவித்த நிவாரண நிதி ரூ.10 லட்சம் ராஜ்கிரண் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து மீனவர் உடல் ஆம்புலன்சில் கோட்டைப்பட்டினம் பகுதியில் உள்ள இடுகாட்டுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories: