தயாரிப்பு தேதியின்றி திண்பண்டங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: பழநி உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

பழநி: தயாரிப்பு தேதி இல்லாத திண்பண்டங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பழநி உணவு பாதுகாப்பு அலுவலர் செல்லதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி கோயிலில் தற்போது வாரத்தின் 7 நாட்களும் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களிடம் விற்பனை செய்வதற்காக அடிவார பகுதிகளில் ஏராளமான இடங்களில் தற்காலிக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு விளையாட்டு பொருட்கள், சிப்ஸ், கற்கண்டு, பேரீட்சை, அல்வா போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

சில கடைகளில் கலப்பட மற்றும் தரமற்ற திண்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து பழநி உணவு பாதுகாப்பு அலுவலர் செல்லதுரையிடம் கூறுகையில், ‘‘பக்தர்களுக்கு தரமான, பாதுகாப்பான, கலப்படமில்லாத, காலாவதியாகாத உணவு பொருட்களையே விற்பனை செய்ய வேண்டும். உணவுப்பொருட்களை கையாள்வோருக்கு தொற்றுநோய் எதுமில்லை என உடல்நலத் தகுதி சான்று கட்டாயம் பெற்றிருத்தல் வேண்டும். உணவுப் பொருட்களை தயாரிக்க பாதுகாக்கப்பட்ட குடிநீரையே பயன்படுத்த வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட இயற்றை அல்லது செயற்கை நிறங்களை சரியான அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். காலவதியான எண்ணெய்கள் மற்றும் அனுமதிக்கப்படாத செயற்கை நிறங்களை பயன்படுத்தக் கூடாது. உணவுப் பொருட்களை தயாரிக்க பயன்படும் நெய், வனஸ்பதி மற்றும் எண்ணெய் வகைகளை வாடிக்கையாளர்கள் அறியும் வகையில் அறிவிப்பு பலகையில் தெரியப்படுத்த வேண்டும். விற்பனைக்கான உணவுப்பொருட்களை மூடிய நிலையில், ஈக்கள், பூச்சிகள் மற்றும் தூசிகள் விழாதவாறு முறையாக கண்ணாடி பெட்டியினுள வைத்து விற்பனை செய்ய வேண்டும்.

தயாரிப்பு தேதி, நிகர எடை, காலாவதி தேதி மற்றும் உணவுப் பொருட்களில் கலந்துள்ள கலவைகள் விபரங்கள் குறிப்புச் சீட்டு வைத்திருக்க வேண்டும். எச்சரிக்கை ஏதாவது இருந்தால் அதுகுறித்த விபரங்களை குறிப்பிட வேண்டும். உணவுப் பொருட்களை சாக்கடையின் மேல் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. மினரல் ஆயில் போன்ற எண்ணெய்களை பேரிட்சையில் தடவி விற்பனை செய்யக்கூடாது. நகர்ப்பகுதியில் உணவுத் தொழில் செய்வதற்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையினரிடம் பதிவு அல்லது உரிமம் பெறுவது அவசியம். இவ்விதிமுறைகளை பின்பற்றாத கடைக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினார்.

Related Stories: