ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூர் கிராமத்தில் கழிவுநீரை அகற்ற கோரிக்கை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூர் கிராமத்தில் கழிவு நீரை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜம்புலிபுத்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள வடக்கு தெரு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அங்குள்ள சிறிய வாறுகால் வழியாக சென்று  சாலையில் தேங்கி கிடக்கிறது.

அந்த தெருவிற்கு செல்லும் சாலையின் முன்பாக கழிவுநீர் குளம்போல் தேங்கி கிடப்பதால் மக்கள் அந்த கழிவுநீரை கடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். டூவீலரில் செல்பவர்கள் தேங்கியுள்ள கழிவுநீரை கடக்கும்போது அடிக்கடி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. இந்த கழிவுநீரால் அப்பகுதி மக்கள் பக்கத்து தெரு வழியாக நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.  இதேபோல் அந்த கிராமத்தில் இருந்து லட்சுமிபுரம் செல்லும் சாலையிலும் கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது.  

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, கழிவுநீர் வெளியே செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: