ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து மாவட்டம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்களை தாரைவார்ப்பது, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் யூனியன் தொமுச சங்கம் சார்பில் திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் எஸ்.எத்திராஜ் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் எஸ்.மணிவண்ணன், சிறப்பு தலைவர் டி.பன்னீர்செல்வம் கவுரவ தலைவர் பி.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசிற்கு எதிராக முழக்கமிட்டனர்.

திருத்தணி: திருத்தணி ரயில் நிலையம் அருகே தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் சண்முகம் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், தொமுச நிர்வாகிகள் ராமதாஸ், சீனிவாசன், தனஞ்செயன், ராமலிங்கம், மூர்த்தி, பரணி, சிஐடியு சார்பில் அக்சல் அகமது, கரிமுல்லா, சம்பந்தம், திமுக ஆட்டோ தொழிற்சங்க தலைவர் அய்யப்பன் மற்றும் கரும்பு விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

பொன்னேரி: மீஞ்சூர் அருகே வல்லூர் 100 அடி சாலையில் நேற்று காலை சிஐடியு மாநில துணை செயலாளர் விஜயன் தலைமை போராட்டம் நடந்தது. இதில் அக்கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்றிய ஒன்றிய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், எஸ்ஐ வேலுமணி ஆகியோர் கொண்ட போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்தனர். ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுதல், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சி, மதிமுக,  தொ.மு.ச சார்பில் கடைகளை அடைத்து மறியல் போராட்டம் நடந்தது.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் விவசாய சங்க போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாவட்ட விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.அருள் தலைமையில் கும்மிடிப்பூண்டியில் ரயில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, திமுக விவசாயிகள் சங்க மாவட்ட துணை அமைப்பாளர் து.மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>