விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்து, காஞ்சிபுரம் பெரியார் நினைவுத்தூண் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் நேரு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி அரியானாவில் அமைதியாக போராடிய விவசாயிகள் மீது காட்டு மிராண்டித் தனமாக தாக்குதல் நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தாக்குதல் நடத்திய சப் கலெக்டர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும், விவசாயத்தை அழிக்கும் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், 2020 மின்சார சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சாரங்கன், நிர்வாகிகள் லிங்கநாதன், பெருமாள், செல்வம், மூர்த்தி, வசந்தா, சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  செங்கல்பட்டு: செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம், மதுராந்தகம் பஸ் நிலையம், கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், சிஐடியு, ஏஐடியுசி, மாதர் சங்கம், வாலிபர் சங்கம், செங்கை பொது தொழிலாளர் சங்கம் சார்பில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல், செங்கல்பட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சங்கர், மதுராந்தகத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் மோகனன், கூடுவாஞ்சேயில் செங்கை பொது தொழிலாளர் சங்க செயலாளர் சேஷாத்திரி ஆகியோர் தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதில் சுமார் 100 பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories:

>