அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் அதிமுகவினரின் பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம்: பொதுமக்களிடம் மனு வாங்கிய திமுக எம்எல்ஏ உறுதி

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் உள்ள பொதுமக்களிடம் குறைகேட்பு முகாம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், செயல் அலுவலர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். திமுக பேரூர் செயலாளர் வக்கீல் லோகநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் ஆப்பூர் சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினரும், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினருமான வரலட்சுமிமதுசூதனன்  கலந்துகொண்டு 18 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள், மாற்று திறனாளிகள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் திமுக வார்டு கிளை செயலாளர்கள் ஆகியோரிடம் குறைகளை கேட்டு மனு வாங்கினார். இதில், 18வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குப்பை கிடங்கை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை அகற்றப்படவில்லை. எம்எல்ஏ நிதியில் ஏற்கனவே பேரூராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பேரூராட்சி நிர்வாகம் பராமரிக்கப்பட வேண்டும். இதேபோல், அனைத்து வார்டுகளிலும் உள்ள சிறுவர் பூங்காக்களை பராமரிப்பு செய்தல், நியாயவிலை கடைகளை பராமரிப்பு செய்தல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்களை கொடுத்தனர்.  

அப்போது, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ பேசுகையில், ‘திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அதிமுகவினர் பொதுமக்களிடையே பொய் பிரசாரங்களை செய்து வருகின்றனர். எனவே, இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம். அனைத்து அடிப்படை வசதிகளையும் படிப்படியாக செய்து தரப்படும்’ என்றார். இதில், பேரூராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் கே.பி.ஜார்ஜ், முன்னாள் வார்டு கவுன்சிலர்கள் பத்மநாபன், ரவி, குமாரிமாசிலாமணி, அப்துல்காதர், குமரவேல், சதீஷ்குமார், மோகன், டில்லீஸ்வரிஅரி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, பிஜேபியின் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ராஜதேவன் எம்எல்ஏவுக்கு சால்வை அணிவித்து அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மனு கொடுத்தார்.

Related Stories: