சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப்பிறகு மோடி, அமித்ஷாவுடன் ஓபிஎஸ், இபிஎஸ் சந்தித்ததன் பின்னணி என்ன? பரபரப்பு தகவலால் கட்சியினர் அதிர்ச்சி

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப்பிறகு மோடி, அமித்ஷா ஆகியோரை திடீரென்று ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் டெல்லிக்கு சென்று சந்தித்து பேசிய விவரங்கள் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மோதிக்கொண்டனர். பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எடப்பாடியும், துணைத்தலைவர் பதவியை ஓ.பன்னீர்செல்வமும் பகிர்ந்து கொண்டனர். ஆனாலும், இருவரும் யாருக்கு ஆதரவு அதிகம் என்பதை காட்டிக் கொள்வதற்காக மூத்த நிர்வாகிகளிடம் தீவிர ஆலோசனை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், தேர்தல் தோல்விக்குப்பிறகு, திடீரென இருவரும் டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினர். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, அதிமுக மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, தேர்தலுக்கு முன்னர், முதல்வர் வேட்பாளருக்கும் சரி, தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கட்சியின் முக்கிய முடிவுகள், மாவட்டச் செயலாளர் நியமனம், நிர்வாகிகள் நியமனம் என்று எதிலுமே ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டு வந்தார். முடிவுகளை எடப்பாடி பழனிசாமியே எடுத்து வந்தார். இதனால், ஒரு கட்டத்தில் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், கட்சியில் தன்னுடைய நிலையே கேள்விக்குறியாகிவிடுமோ என்று அச்சப்பட்டார். அதிமுகவில்தான் அவமானப்படுத்தப்பட்டபோது, மோடியின் ஆதரவு கிடைத்ததால்தான் அதிமுகவை ஓ.பன்னீர்செல்வம் உடைத்தார்.

இதனால், எப்போதுமே ஓ.பன்னீர்செல்வத்துக்கு மோடி மற்றும் பாஜ தலைவர்களின் ஆதரவு உண்டு. இதனால்தான், அதிமுகவில் தன்னுடைய நிலையை உறுதிப்படுத்தவும், அதிமுகவுக்குதான் மட்டுமே ஒருங்கிணைப்பாளர் என்பதை தொண்டர்களுக்கு வெளிப்படையாக தெரியபடுத்தும் வகையிலும், பாஜ ஆதரவு தனக்கு மட்டுமே உள்ளது என்று காட்டிக் கொள்ளவும் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்தார். இதற்காக, தனது மகனுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவில் பால் காய்ச்சுவதை காரணமாக வைத்துக் கொண்டு டெல்லி செல்ல திட்டமிட்டார். மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை சந்திக்க நேரம் வாங்கித் தரும்படி தனது மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத்குமாரிடம் கேட்டுக் கொண்டார்.

அவரும், 26ம் தேதி மோடியை சந்திக்க நேரம் வாங்கினார். இதை ரகசியமாகவும் வைத்திருந்தார். பின்னர், ஞாயிற்றுக்கிழமை காலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது மருமகனுடன் டெல்லி புறப்பட்டுச் சென்றார். திங்கள்கிழமை, தனது மகன் வீட்டு நிகழ்ச்சியுடன் மோடியையும் சந்திக்க உள்ள தகவல் முன்னாள் அமைச்சர் வேலுமணி மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்தது. இதனால் வேலுமணி, அவசர அவசரமாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை தொடர்பு கொண்டு பேசி, நாங்கள் டெல்லி வருகிறோம். எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து சந்திக்க அனுமதி வாங்கித் தரும்படி கூறியுள்ளார்.

இதனால், நிர்மலா சீத்தாராமன் ஏற்பட்டின்படி, எடப்பாடி பழனிசாமியும், வேலுமணியும் டெல்லிக்கு அவசர அவசரமாக புறப்பட்டுச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்குப் பிறகுதான், எடப்பாடி டெல்லி வரும் தகவல் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். வேறு வழி இல்லாமல் எல்லோரும் ஒன்றாக சென்று மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் சம்மதித்தார். ஆனால், திங்கள்கிழமை மோடியை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக சந்தித்தனர். அப்போது, இருவரும் தங்களுடைய கைகளில் தனித்தனி கவர்களை வைத்திருந்தனர். சந்திப்பு முடிந்த நேரத்தில், இருவரும் மோடியிடம் தனியாக பேச வேண்டும் என்று கேட்டனர்.

என்னடா இது. இருவரும் வந்து இப்படி கேட்கிறார்களே என்று நினைத்த மோடி, தனித்தனியாக சந்திக்க அனுமதி அளித்தார். முதலில் ஓ.பன்னீர்செல்வம் தனியாக சந்தித்தார். அப்போது, தன்னிடம் இருந்த ஒரு கவரை மோடியிடம் கொடுத்தார். 5 நிமிட சந்திப்புக்குப் பிறகு எடப்பாடி தனியாக சந்தித்தார். அவரும், ஒரு கவரை மோடியிடம் கொடுத்தார். எடப்பாடியும் 5 நிமிடம் தனியாக பேசினார். அவரும் வெளியில் வந்தவுடன், வேலுமணி தன் பங்கிற்கு சேர்ந்து எல்லோரும் சேர்ந்து குரூப் போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதனால் அனைவரும் சேர்ந்து இருப்பதுபோல மோடி வரவேற்பரையில் வைத்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டு அனுப்பி வைத்து விட்டார். அதன்பின்னர், திங்கள்கிழமை இரவில் இருவரும் தனித்தனி அறையில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கினர். இரவில் 3 முறை தனியாக காரில் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் வெளியில் ரகசியமாக சென்று வந்தார். அவர் எங்கு சென்றார், யாரைப் பார்த்தார் என்பதை யாருக்கும் தெரியாத வகையில் மிகவும் ரகசியமாக பார்த்துக் கொண்டார். அதன்பின்னர் நேற்று அமித்ஷாவை இருவரும் சந்தித்தனர். அப்போது, தேர்தல் தோல்விக்கு இருவரும் விளக்கம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘நான் சொன்னபடி சசிகலாவையும் சேர்த்துக் கொண்டிருந்தால், கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கலாம். இந்த அளவுக்கு தோற்றிருக்க வாய்ப்பு இல்லை. இனிமேலாவது நாங்கள் சொல்வதை கேளுங்கள்’ என்று ஆலோசனைகளை கூறி அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தேர்தல் தோல்விக்கு அதிமுகவும், அதன் தலைவர்களுமே முழு காரணம் என்பதை மறைமுகமாக அமித்ஷா அவர்கள் இருவரிடமும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் பாஜவின் வேட்பாளர்கள் தோல்விக்கு அதிமுகவினரின் ஒத்துழையாமையே காரணம் என்பதையும் அமித்ஷா அவர்களிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மோடியுடன் இருந்த ஒரு இணக்கமான சந்திப்பு, அமித்ஷாவிடம் காண முடியவில்லை என்பதை இருவரும் உணர்ந்துள்ளனர். இதனால் அதிமுக கூட்டணியில் விரைவில் அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இந்த தகவல்கள் அரசியல் பொதுவெளியில் வெளியானவுடன் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Related Stories: