தமிழறிஞர் இளங்குமரனார் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்

திருப்பரங்குன்றம்: மதுரை திருநகரை சேர்ந்தவல் தமிழறிஞர் இளங்குமரனார். 95 வயதான இவர், வயது மூப்பு காரணமாக நேற்றுமுன்தினம் இரவு காலமானார். திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் கிராமத்தில் 1927 ஜன. 30ம் தேதி இளங்குமரனார் பிறந்தார். மதுரை திருநகர் அரசு பள்ளியில் 1946, ஏப். 8ல் தமிழ் ஆசிரியராக தமிழ் பணியை தொடங்கினார். சென்னை பல்கலைக்கழகத்தில் 1951ல் புலவர் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். நூலாசிரியர், பதிப்பாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துவந்தார். திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு எனும் இவரது நூலை முன்னாள் பிரதமர் நேரு வெளியிட்டார். ‘‘சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு’’ எனும் நூலை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வெளியிட்டார்.

 எங்கும் பொழியும் இன்பத்தமிழ், திருக்குறள் தமிழ்மரபு உள்ளிட்ட 500க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். இவர் தனது தலைமையில் தமிழ்வழி திருமணங்களை அதிகளவில் நடத்தி வைத்துள்ளார். இவரது தமிழ்சேவையை பாராட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தமிழ்செம்மல் விருதும், பாரதிதாசன் பல்கலைக்கழகம் முதுமுனைவர் பட்டமும் வழங்கியுள்ளது. மேலும் தமிழக அரசு திருவிக விருதும் வழங்கி கவுரவித்தது. இவருக்கு இளங்கோ  மற்றும் பாரதி என்ற இரு மகன்களும், கலைமணி, திலகவதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

இவரது உடல் மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. தமிழறிஞர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இறுதிச்சடங்கு நேற்று மாலை திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது. தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். கலெக்டர் அனீஷ்சேகர் உள்ளிட்ட அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஊர்வலமாக திருநகர் மயானம் கொண்டு வந்து, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம்  செய்யப்பட்டது.

Related Stories: