காவலர் உடல் தகுதித்தேர்வில் இளைஞர் மயங்கி விழுந்து சாவு: விருதுநகரில் சோகம்

விருதுநகர்: விருதுநகரில் காவலர் உடல் தகுதித்தேர்வில் பங்கேற்று ஓடிய இளைஞர் மயங்கி விழுந்து இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர், மதுரை ரோட்டில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் காவலர் உடல் தகுதித்தேர்வு நேற்று துவங்கியது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,228 ஆண்கள், 868 பெண்கள் என மாவட்டத்தில் 3,096 பேர் பங்கேற்கின்றனர். முதல் நாளான நேற்று, உடல் தகுதி தேர்வில் பங்கேற்க 500 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். உயரம் - மார்பு அளவு தகுதியுடையவர் 1,500 மீட்டர் ஓட்டத்தில் ஓடினர். இதில் விருதுநகர் அருகே மீசலூர் அழகாபுரியை சேர்ந்த சங்கரராஜ் மகன் மாரிமுத்து (21) கலந்து கொண்டு ஓடினார். இவர், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் முடித்துள்ளார்.  இரண்டாவது சுற்று ஓடிய போது மாரிமுத்து திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

உடனடியாக  அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாரிமுத்து  ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் கூறுகையில், ‘‘மாரிமுத்து இறப்பிற்கான காரணம், பிரேத பரிசோதனைக்கு  பிறகே  தெரியவரும். இது குறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்’’ என்றனர். காவலர் உடல் தகுதித்தேர்வில்  பங்கேற்று ஓடிய இளைஞர் மயங்கி விழுந்து இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: