ஆடு வாரியம் அமைக்க வழக்கு

மதுரை:   திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த கருப்பசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பாரம்பரிய நாட்டு ஆட்டினங்கள் அதிகளவில் உள்ளன. இவை மக்களுக்கு தீங்கற்ற சத்தான உணவையும், வருவாயையும் தருவதோடு, வேளாண்மை மற்றும் பயிர்களுக்கு உயிர் உரங்களையும் தருகின்றன. வாடிகுறி, யாடிகுறி, ஜன்னிகுறி, மொள்ளகுறி, ஜன்னாகுறி, ஜாலிகுறி என பல வகையான ஆட்டினங்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டவை. இவை  தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளன. குறிப்பாக வரும் 10 ஆண்டுகளில் பாரம்பரிய நாட்டு ஆட்டினங்கள் அழிந்து போகும் சூழல் உள்ளது. தற்போது வணிக நோக்கத்தில் வளர்க்கப்படுவதால், உடனடியாக நோய்வாய்ப்படவும், பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன.

எனவே, தமிழகத்தின் பாரம்பரிய ஆட்டினங்களை பாதுகாக்கும் வகையில், பாரம்பரிய இன ஆட்டு வாரியம் அமைக்கவும், இவ்வாரியத்தில் குரும்பர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர், ‘‘குறிப்பிட்ட வாரியம் அமைக்கவும், அதில் குறிப்பிட்டோரை நியமிக்குமாறும் அரசுக்கு உத்தரவிட முடியாது. எனவே, மனுதாரரின் கோரிக்கை குறித்து அரசிடம் முறையிட்டு உரிய நிவாரணம் பெறலாம்’’ எனக்கூறி மனுவை முடித்து வைத்தனர்.

Related Stories: