தஞ்சை கீழ் அலங்கம் பகுதியில் கோட்டை அகழியில் நீர்த்தூம்பி கண்டுபிடிப்பு

தஞ்சை:  தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அகழி தூர்வாரும் பணியின் போது, அப்பகுதியில் அரண்மனையிலிருந்து அகழிக்கு நீர்வரக்கூடிய, நீர்த்தூம்பி கண்டுபிடிக்கப்பட்டது. தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் உள்ள அகழியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. அப்பகுதியினை, சரஸ்வதி மகால் நூலக தமிழ்ப்பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன் மற்றும் சுவடியியல் ஆய்வாளர் ஜெயலெட்சுமி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அகழியில் அரண்மனையிலிருந்து அகழிக்கு நீர்வரக்கூடிய, நீர்த்தூம்பி கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து மணிமாறன் கூறியதாவது: தஞ்சாவூர் நகரத்தில் கீழ, மேல, தெற்கு, வடக்கு அலங்கம் பகுதிகளில், மன்னர்களால் வெட்டப்பட்ட அகழி நீரால் சூழப்பட்டு, அரண்மனைக்கு பாதுகாப்பு கோட்டை அரணாக இருந்துள்ளது. இந்த அகழியில் ஒரு பகுதிகளில் கட்டிடங்கள் கட்டப்பட்ட நிலையில், மேல, வடக்கு, கீழ அலங்கம் பகுதிகளில் ஓரளவுக்கு அகழியாக இருந்து வருகிறது. இந்த அகழியின் உட்புறச்சுவர்கள் பழமையான கட்டுமானங்கள் காணப்படுகிறது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அகழியை மேம்படுத்தும் விதமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அகழி தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொடிமரத்து மூலையை ஒட்டிய பகுதியில் அகழியின் கோட்டை கரை சுவர்கள் செம்புறாங்கற்கள் கொண்டு வலிமையாக கட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில் சுருங்கை சிறு வழியாக அமைந்த நீர்த்தூம்பினை ஆய்வில் கண்டறியப்பட்டது. இவை அரண்மனை உள்புறங்களிலும் விழும் மழைநீரும், அங்குள்ள குளங்கள், கிணறுகளில் இருந்து வெளியேறக்கூடிய தண்ணீர் அகழியில் சென்று சேருவதற்கான நிலத்தடியில் அமைந்திருந்த வழித்தடமே இந்நீர்வழி தூம்பியாகும். நான்கு புறமும் செம்புறாங்கற்கள் கொண்டு சதுரவடிவில் முக்காலடி அளவில் இந்த நீர்வழிப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது என்றார். 

Related Stories: