அணைக்கட்டு அருகே பரபரப்பு வேப்பமரத்தில் பால் வழியும் அதிசயம்: பூஜை செய்து வழிபட்ட கிராம மக்கள்

அணைக்கட்டு: அணைக்கட்டு விஏஓ அலுவலகம் எதிரே வேப்பமரக்கிளையில் பால் வழியும் அதிசய நிகழ்வு நடந்துள்ளது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் வேப்பமரத்திற்கு பூஜை ெசய்து வழிபட்டனர். 

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பஜார் பகுதியில் விஏஓ அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் எதிரே உள்ள 25 அடி உயர வேப்பமரத்தடியில் நேற்று மாலை சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மேல் மழை துளி போன்று வெள்ளை நிறத்தில் திரவம் விழுந்துள்ளது. தொடர்ந்து, வேப்பமரத்தின் கிளைகளை உற்றுப்பார்த்தனர். அப்போது, வேப்பமரத்தின்  மேல் சாலையை நோக்கி செல்லும் பெரிய கிளையில் இருந்து சொட்டு, சொட்டாக பால் வழிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

சிறிது நேரத்தில் இந்த தகவல் அணைக்கட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காட்டுத்தீயாக பரவியது. இதனால் ஏராளமான மக்கள் வேப்பமரத்தின் அருகே குவிந்தனர். மரத்தில் இருந்து வழியும் பாலை ஆச்சரியத்துடன் பார்த்த மக்கள் மரத்தின் அடியில் ெசங்கல் வைத்தும், வேப்பமரத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்தும் வழிபட்டனர். பின்னர், மரத்தில் இருந்து சொட்டு சொட்டாக வழிந்த பாலை கையில் பிடித்து எடுத்து சென்றனர். இதுகுறித்து, தகவலறிந்த அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் கூட்டம் சேர்வதை தடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தாசில்தார் பழனி உத்தரவின்பேரில், விஏஓ நீதிபதி தலைமையிலான வருவாய்த்துறையினர் அங்கு வந்து ஆய்வு செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: