தமிழகம், வட மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் 3 ஆயிரம் லாரிகள் நிறுத்தி வைப்பு: மகாராஷ்டிராவில் தொடர் மழையால் நடவடிக்கை

சேலம்: மகாராஷ்டிராவில் பெய்து வரும் தொடர் மழையால் தமிழகத்தில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடுகிறது. இதில் தமிழகத்தில் மட்டும் 4 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் இயக்கப்படுகிறது. சரக்கு லாரிகளை  பொறுத்தமட்டில் மகாராஷ்டிராவில் இருந்து அதிகளவில் இயக்கப்படுகிறது. அங்கிருந்து தினசரி பெரிய வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், இரும்பு தளவாடப்பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மசாலாப்பொருட்கள் உள்பட எண்ணற்ற பொருட்கள் தமிழகத்திற்கு வருகிறது. அதேபோல் மகாராஷ்டிராவில் இருந்து இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கும் சரக்கு லாரிகள் செல்கிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இருந்து நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் லாரிகள் தமிழகத்திற்கு வருகிறது. அதேபோல் தமிழகத்தில் இருந்து ஜவ்வரிசி, கல்மாவு, கோழித்தீவனம், மஞ்சள், தேங்காய், வெல்லம் உள்பட பல்வேறு சரக்குகள் மகாராஷ்டிராவிற்கு செல்கிறது. 

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக மகாராஷ்டிராவில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலை எங்கும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மழையால் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக மகாராஷ்டிராவில் இருந்து மற்ற எந்த மாநிலங்களுக்கும் சரிவர மளிகை சாமான்கள், பெரிய வெங்காயம், பூண்டு உள்பட பல்வேறு பொருட்கள் செல்லவில்லை. அதேபோல் மற்ற மாநிலங்களில் இருந்தும் மகாராஷ்டிராவிற்கு சரக்குகள் செல்லவில்லை. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான லாரிகள் சரக்குகளுடன் மகாராஷ்டிரா எல்லை மற்றும் கர்நாடகா மாநில எல்லையிலும், மகாராஷ்டிராவையொட்டியுள்ள இதர மாநில எல்லைகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு லாரிகள் இயக்கப்படாமல் உள்ளதால் உரிமையாளர்களுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் தனராஜ் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து மகாராஷ்டிராவிற்கு நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் செல்கிறது. அதேபோல் அங்கிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தமிழகத்திற்கு வருகிறது. கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைவிடாத மழை பெய்கிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் சாலைகள் தெரியாத அளவுக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து மகாராஷ்டிராவிற்கு போன ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் கர்நாடகா எல்லையான உப்பிலி என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தையொட்டியுள்ள மாநில எல்லைகளிலும் ஏராளமான லாரிகள் ஆங்காங்கே சரக்குடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்களாக லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் டிரைவர், கிளீனர்கள் சாப்பாட்டுக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். லாரி உரிமையாளர்களுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை மேலும் இன்னும் ஓரிரு நாட்கள் நீடிக்கும். பிறகு நிலைமை சீரடைய இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. அதனால் தமிழகத்தில் இருந்து மகாராஷ்டிராவிற்கு சரக்குகள் கொண்டு செல்வதை லாரி உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு தனராஜ் கூறினார்.

லாரிகளில் டீசல் திருட்டு

‘‘தொடர் மழையால் கடந்த நான்கு நாட்களாக ஒரே இடத்தில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை கொள்ளையர்கள் சாதகமாக பயன்படுத்தி இரவு நேரத்தில் லாரியில் இருந்து டீசல் திருடுகின்றனர். ஒரு லாரியில் இருந்து 200 முதல் 300 லிட்டர் டீசலை திருடிக்கொள்கின்றனர். ேமலும் லாரியில் இருக்கும் சரக்குகளையும் சில இடங்களில் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுபோன்ற செயலால் லாரி உரிமையாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். எனவே தற்போது மகாராஷ்டிரா மாநில எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ள லாரிகளுக்கு அங்குள்ள போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்,’’ என்றும் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: