'பொதுமுடக்கம், மணி அடித்தல், கடவுள் புகழ் பாடுதல்'!: கொரோனாவை மத்திய அரசு கையாண்ட விதம் குறித்து ராகுல்காந்தி விமர்சனம்..!!

டெல்லி: கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பொது முடக்கத்தை தன்னிச்சையாக அமல்படுத்தியது, மக்களை மணி அடிக்க செய்தது, கடவுளை புகழ்ந்து பேசுவது ஆகிய 3 நிலைகளை மட்டுமே மத்திய அரசு கையாண்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, கொரோனா பரவலை மத்திய அரசு கையாளும் விதம் குறித்து காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மத்திய அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 3 நிலைகளை கையாண்டதாக குறிப்பிட்டுள்ளார். துக்ளக் பாணியில் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியது முதல் நிலை. பொதுமக்களை மணி அடிக்க செய்தது இரண்டாம் நிலை. கடவுளை புகழ்ந்து பாடியது மூன்றாவது நிலை என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். போதிய அவகாசம் இன்றி மத்திய அரசு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியதையும், பிரதமர் மோடி பொதுமக்களை மணி அடிக்க கூறியதையும் ராகுல்காந்தி இவ்வாறு விமர்சித்துள்ளார்.

பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி இல்லாமல் திணறி வரும் நிலையில் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் மத்திய அரசு பாசாங்கு செய்வதாகவும், பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் நாடகமாடுவதாகவும் ராகுல்காந்தி நேற்று கடுமையாக விமர்சித்திருந்தார். மிகப்பெரிய அளவில் மக்களிடம் நன்கொடை பெறப்பட்டு உருவாக்கப்பட்ட பி.எம்.கேர். நிதி என்ன ஆனது? என்றும் ராகுல் கேள்வி எழுப்பியிருந்தார்.

Related Stories: