நாகம் வாயில் இருந்து விழுந்த மரகத, மாணிக்க கற்கள் என கூறி நாகர்கோவிலில் பல லட்சம் மோசடி செய்த போலி சாமியார் எஸ்.பி.யிடம் பெண்கள் பரபரப்பு புகார்

நாகர்கோவில், மார்ச் 28:  நாகர்கோவில் கோணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நாகர்கோவில் சுங்கான்கடை அருகே உள்ள கோயில் ஒன்றில் குறி சொல்வதாக வந்த தகவலின் பேரில் நாங்கள் அங்கு சென்றோம். அங்கு கோயில் நடத்தி வந்த சாமியார் நாக லோகத்தில் இருந்து வந்த பிறவி என கூறி தொடக்கத்தில் எங்களின் குடும்ப பிரச்சினைகளை கேட்டறிந்தார். ஏராளமான ஆண்கள், பெண்களும் இங்கு வந்து செல்கிறார்கள். தொடக்கத்தில் நாங்கள் இந்த சாமியார் கூறுவதை நம்பினோம். இவரின் மோசடி பேச்சை நம்பி ஏராளமான ரூபாயை செலவு செய்ததோடு ரொக்கமாக பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளோம்.சுமார் இரண்டு ஆண்டுகளாக கோயிலுக்கு சென்றும் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் தான், சாமியாரின் மோசடிகள் எங்களுக்கு தெரிய வந்தது. சாமியார் கூறியதை அனைத்தையும் நம்பி எங்கள் குடும்பம் அதை பின்பற்றியதால் குடும்பமே சிதைந்தது. இந்த சாமியார் தன்னை எதிர்த்தவர்களை தெய்வீக சக்தியால் கொன்றதாகவும் கூறி வருகிறார். தற்போது யாராவது கேள்வி கேட்டால், அவர்களையும் கொன்று விடுவேன் என மிரட்டி வருகிறார். தனது கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தெய்வம் கொடுப்பது போல் நடித்து பூக்களுக்குள் மறைத்து வைத்து பல வண்ண கற்களை வழங்கி நாக தெய்வங்கள் தனக்குத் தரும் மாணிக்க கற்கள் என்றும், விலை உயர்ந்தவை எனவும் கூறி அவற்றிற்காக பணம் வாங்கி தொடர்ந்து மோசடி செய்து வருகிறார். இந்த கற்களை நகைக்கடைகளில் கொண்டு சென்று விசாரித்த போது, சாதாரண கற்கள் என தெரியவந்தது.இது மட்டும் இன்றி தனக்கு தெய்வம் தந்த ஏராளமான தங்க நகைகள் உள்ளன என பொதுமக்களிடம் கூறி நம்ப வைத்து ஏமாற்றி வருகிறார். நடுக்காட்டில் தியானம் செய்த போது பெரும் காற்று வீசி ஒரு மரத்தினுள்ளிருந்து தெய்வங்களால் வழங்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் வெள்ளி குடங்கள், மாணிக்க மரகத வைர நகைகள், தேவியின் கிரீடம், பிளாட்டினம் ஆகிய அனைத்தும் கடவுளின் அருளால் தனக்கு கிடைத்ததாக பொதுமக்களிடம் கூறி வருகிறார்.  கோயிலுக்கு வரும் மக்களிடம் அந்தக் கோயிலில் உள்ள சிலைகளான சபரிமலை ஐயப்பன், மகாவிஷ்ணு, மகாலட்சுமி, கருடன் உள்ளிட்ட சிலைகள் அனைத்தும் தானாக உருவான தங்க சிலைகளான சுயம்பு என கூறி வருகிறார். சில நகைகளை காட்டி அவை விலை உயர்ந்த நகைகள் எனவும் கடவுள் தனக்கு தானமாக தந்ததாகவும் கூறி வருகிறார். பலவகை குறைந்த விலையிலான முத்துக்களை அதிக விலை உடையவை எனக் கூறி மக்களிடம் வழங்கி பணம் பெற்று மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.கோயிலில் பூஜைக்கு வைத்த கொழுக்கட்டையை நாகங்கள் சாப்பிட்டதாகவும் அதையொட்டி மாணிக்க, மரகத கற்களை வாந்தி எடுத்து  சென்றதாகவும் கூறி, வண்ண வண்ண கற்களை எடுத்து காண்பித்து அதை பத்தாயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய் வரை ஏலம் விடுவார். இவ்வாறு ஏராளமானோர் ஏலம் பிடித்து சென்றுள்ளார்கள். மாதந்தோறும் ஆயில்யம் நாளில் நடைபெறும் நாக சிலைக்கு பால் அபிஷேகம் செய்யும் போது நீல நிறம் கலந்து பால் வரும் அதை நாக விஷம் என்று பொய்யாக கூறுவதோடு, பொதுமக்கள் முன்னிலையில் தானே பாலை குடித்து விட்டு அப்பாவி பக்தர்களை நம்ப வைத்து மோசடி செய்து வருகிறார். தன்னை நம்பும் பக்தர்கள் அதை குடித்தால் அவர்களுக்கு அமிர்தமாக இருக்கும் என கூறி அவர் குடிக்கும் போது பக்தர்களும் அதை குடிப்பது வழக்கம்.ஆன்மீகம் மட்டுமின்றி ரயில்வே துறையிலும் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் மூன்று லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளனர். இவரது மோசடி வேலையை அறிந்து யாரேனும் வெளியே சொன்னால் அமாவாசை தினத்தில் பத்திரகாளி வருவதைப் போல் வேடம் அணிந்து குருதி பூஜை ஒன்றை நடத்தி உடைவாள் கையில் ஏந்தி பக்தர்களின் முன்பாக வந்து ஆலயத்துக்கு தீங்கு நினைப்பவர்களை கொலை செய்து விடுவேன் என மிரட்டுவார். சாதாரண ஏழை பொதுமக்களை நம்ப வைத்து, ஆன்மீக நம்பிக்கையை பயன்படுத்தி மோசடி  செய்ததுடன், தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று போலி அடையாள அட்டையை காண்பித்து பலருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்திருப்பதன் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவருக்கு உதவியாக இருந்தவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறி உள்ளனர்.பாம்புகள் தன்னுடன் வசிப்பதாக வாய்ஜாலம்மேலும் இந்த சாமியார்,  பாம்புகள் தன்னுடன்  வசிப்பதாகவும் தான் தங்குமிடத்தில் ஏராளமான பாம்புகள் உள்ளதாகவும் அவை  நள்ளிரவில் மாணிக்க கற்களை வாந்தி எடுத்து வைத்ததாகவும் வாய்ஜாலம் அடித்து  வருகிறார். அவர் பேசுவதை புதிதாக வரும் பக்தர்கள் நம்பி சாதாரண கற்களை அதிக  விலை கொடுத்து வாங்கி ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளார்கள். ஒவ்வொரு  பக்தர்களிடமும் பல ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். காசியில் நீராடும் போது  கிடைத்ததாக கூறி ஸ்படிக சிவலிங்கம் என்ற ஒன்றை கோயிலில் வைத்து 75 ஆயிரம்  ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை விற்றுள்ளார்….

The post நாகம் வாயில் இருந்து விழுந்த மரகத, மாணிக்க கற்கள் என கூறி நாகர்கோவிலில் பல லட்சம் மோசடி செய்த போலி சாமியார் எஸ்.பி.யிடம் பெண்கள் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Related Stories: