×

மகரம்

கொடுத்துச் சிவந்த கைகளுடைய நீங்கள், எவரிடமும் உதவி கேட்டு கை நீட்ட மாட்டீகள். பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகுபவர்கள் நீங்கள். ஒரு மாத காலமாக 5ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு பிள்ளைகளுக்கு பிரச்னைகளையும், சிக்கல்களையும் கொடுத்த சூரியன் இந்த மாதம் முழுக்க 6ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. அவர்களை எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில், விரும்பிய பாடப்பிரிவில் சேர்ப்பீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். சனி 12ல் நிற்பதால் தவிர்க்க முடியாத செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். வீடு, மனை வாங்கும் போது, விற்கும் போது அலட்சியம் வேண்டாம். தங்க ஆபரணங்களை கவனமாகப் பயன்படுத்தவும். 22ம் தேதி வரை புதன் 6ல் மறைந்திருப்பதால் தூக்கமின்மை, கண் எரிச்சல் வரக்கூடும். உறவினர்கள், நண்பர்களின் சுரூபத்தை அறிவீர்கள்.

23ம் தேதி முதல் புதன் ராசியைப் பார்ப்பதால் திட்டமிட்டு எந்த வேலையையும் செய்வீர்கள். இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தீர்களே, இனி நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டிற்கு குடிபுகுவீர்கள். மகான்கள், கல்வியாளர்களின் நட்பு கிட்டும். செவ்வாயும், கேதுவும் சேர்ந்து ராசிக்குள் நிற்பதால் வீண் சந்தேகத்தால் சிலரின் நட்பை இழக்க நேரிடும். அவசரப்பட்டு சில வார்த்தைகள் சொல்லி அதனால் மனக்கசப்புகள் உறவினர், நண்பர்கள் மத்தியில் ஏற்படக்கூடும். அதனால் அதிரடி பேச்சுகளை குறைப்பது நல்லது. ஏழரைச் சனி தொடங்கியிருப்பதால் யாராக இருந்தாலும் இடைவெளிவிட்டு பழகுவது நல்லது. திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். அரசியல்வாதிகளே! எதிர்க்கட்சியிரை தாண்டி முன்னேறுவீர்கள். தொகுதியில் மதிக்கப்படுவீர்கள். மாணவர்களே! நல்லவர்களின் நட்பால் முன்னேறுவீர்கள். மந்தம், மறதி நீங்கும்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். கடைக்கு செல்லாமலேயே இருந்தீர்களே! அந்த நிலை மாறி ஆர்வமாக கடைக்கு செல்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அவ்வப்போது உங்களிடம் எதிர்மறையாக பேசி வந்த பங்குதாரர்கள் விலகுவார்கள். நேர்மறை எண்ணங்கள் மற்றும் உங்களை ஆதரிக்கும் பங்குதாரர் வந்து சேருவார். கடையை பிரபலமான இடத்திற்கு மாற்றுவீர்கள். புது முதலீடு செய்ய உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் இனி நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். என்றாலும் 10ல் குரு நிற்பதால் உத்யோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரியைப் பற்றி சக ஊழியர்களிடம் விமர்சித்துப் பேசாதீர்கள். அதிக சம்பளத்துடன் அண்டை மாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை கிடைக்கும். கலைத்துறையினரே! உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பரிசு, பாராட்டுகள் உண்டு. விவசாயிகளே! வற்றிய கிணற்றில் நீர் ஊற செலவு செய்து கொஞ்சம் தூர் வார்வீர்கள். மகசூல் பெருகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். தொட்டதெல்லாம் துலங்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:


ஜூன் 15, 16, 17, 23, 24, 25, 26 மற்றும் ஜூலை 3 ,4, 5, 6, 7, 8, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூன் 18ம் தேதி காலை 9.41 மணி முதல் 19, 20ம் தேதி பிற்பகல் 1.02 மணி வரை.

பரிகாரம்:

நெல்லை நெல்லையப்பரையும் காந்திமதி அன்னையையும் தரிசியுங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று இயன்றளவு உதவுங்கள்.

Tags :
× RELATED விருச்சிகம்