ஐதராபாத்: ஐஸ்வர்யா ராஜேஷ், நேற்று முன்தினம் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியது: நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு நடந்த சம்பவம் இது. அதை எப்போதும் நான் மறக்க மாட்டேன். போட்டோஷூட் என்று ஒருவன் அழைத்தான். எனது அண்ணனுடன் சென்றேன். பிறகு எனது அண்ணனை வெளியிலேயே உட்காரும்படி சொல்லிவிட்டு, என்னை உள்ளே அழைத்துச் சென்றான். அப்போது உள்ளாடைகளை மட்டும் கொடுத்து, ‘இதை அணிந்து கொள், உன் உடலை நான் பார்க்க வேண்டும்’ என்று சொன்னான். எனக்கு என்னெவென்றே புரியவில்லை. அப்போது நான் மிகவும் சின்ன பெண்.
இங்கு எல்லாமே இப்படித்தான் நடக்குமோ என்று யோசிக்க ஆரம்பித்தேன். அங்கு இருந்தவர்களும், இதை அணிந்ததும் எப்படி போட்டோ எடுக்கலாம் என்று பேச ஆரம்பித்தனர். இன்னும் 5 நிமிடங்கள் அவர்கள் என்னிடம் பேசி இருந்தால், ஒருவேளை நான் அதை அணிந்து கொண்டிருப்பேன். ஆனால், ஏதோ தப்பாக நடக்கிறது என்று நான் உணர்ந்ததும், என் அண்ணனிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று சொல்லி, அந்த அறையில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இதுபோல் அவர்கள் இன்னும் எத்தனை பெண்களுக்கு செய்திருப்பார்கள் என்று நினைத்து பார்த்தேன். என்னால் அந்த சம்பவத்தை இன்னும் கூட மறக்க முடியவில்லை. இதை இப்போதுதான் நான் பொதுவெளியில் சொல்கிறேன்.
