ராசா என்ற முன்னணி ஹீரோவின் வெறித்தனமான ரசிகன் ஆதித்யா பாஸ்கர். இன்னொரு முன்னணி ஹீரோவின் தீவிர ரசிகன் ரக்ஷன். இந்நிலையில், ஒரேநாளில் அந்த 2 ஹீரோக்களின் படங்கள் ரிலீசாகின்றன. இருதரப்பு ரசிகர்களும் மோதிக்கொள்ள, ஒரு மர்ம நபர் ராசா ரசிகனின் மனைவி, குழந்தையையும் மற்றும் தாதா ரசிகனின் அப்பா, அம்மாவையும் கடத்தி, இரண்டு முன்னணி நடிகர்களும் தன்னிடம் கான்ஃபரன்ஸ் காலில் பேச வேண்டும் என்று மிரட்டுகிறான். இதுபோல் 3 கதைகள். இடியாப்ப சிக்கலில் தவிக்கும் அந்த கதைகளின் முடிச்சு அவிழ்வதே படம்.
‘ஹாட்ஸ்பாட்’ முதல் பாகத்தில் கவனத்தை ஈர்த்த இயக்குனர் விக்னேஷ் கார்த்திக், 2ம் பாகத்தை விறுவிறுப்பாக இயக்கி, 3ம் பாகத்துக்கு லீட் கொடுத்துள்ளார். ஹீரோக்களை கண்மூடித்தனமாக நம்பும் ரசிகர்களுக்கு கடத்தல் ஆசாமி எம்.எஸ்.பாஸ்கர் மூலம் பாடம் நடத்தியுள்ளனர். அவரும் நீண்ட டயலாக் பேசி முடிக்க, இரு ஹீரோக்களின் ரசிகர்கள் ஆதித்யா பாஸ்கரும், ரக்ஷனும் மனம் திருந்தி, பிறகு எம்.எஸ்.பாஸ்கருக்கு ரசிகர் மன்றம் திறக்கின்றனர். ஆடை சுதந்திரம், பெண்ணிய கருத்து, திருமணத்துக்கு முன்பே ரிகர்சல் பார்க்க வேண்டும் என்ற துணிச்சல் என்று, சஞ்சனா திவாரி செமையாக நடித்துள்ளார்.
ஆனால், தனது தந்தை தம்பி ராமய்யா நீண்ட கருத்து சொல்வதன் மூலம் உடனே திருந்துகிறார். 2050ல் வசிக்கும் பவானிஸ்ரீயும், 2025ல் வசிக்கும் அஸ்வின் குமார் லட்சுமிகாந்தனும் இயல்பாக நடித்துள்ளனர். பிரியா பவானி சங்கர், கதை கேட்டு மிரளும் கே.ஜே.பாலமணிமார்பன், பிரிகிடா சகா, விக்னேஷ் கார்த்திக் ஆகியோரும் கவனிக்க வைக்கின்றனர். சதீஷ் ரகுநாதன் பின்னணி இசையும் மற்றும் ஜெகதீஷ் ரவி, ஜோசப் பால் ஒளிப்பதிவும், யு.முத்தையன் எடிட்டிங்கும் கதை நகர உதவியுள்ளன. முற்பகுதியிலுள்ள சுவாரஸ்யம் பிற்பகுதியில் குறைவு.
