திரையுலகை பொறுத்தவரையில் கடின உழைப்பு, திறமை, அழகு இருந்தாலும், தொடர்ந்து ஜெயிக்க அதிர்ஷ்டமும் வேண்டும் என்று நம்பப்படுகிறது. ஓரிரு படம் வெற்றிபெறவில்லை என்றால், அதில் நடித்த மற்றவர்களை எல்லாம் விட்டுவிட்டு, ஹீரோயினை மட்டும் ‘ராசியில்லாத கதாநாயகி’ என்று சொல்வார்கள். ஆனால், இப்படி கோலிவுட் ஏரியாவில் கேலி செய்யப்பட்ட பல ஹீரோயின்கள் டோலிவுட், சாண்டல்வுட், மல்லுவுட், பாலிவுட் ஏரியாவுக்கு சென்று முன்னணி ஹீரோயினாக மாறியிருக்கின்றனர். இப்போது ஓரிரு ஹீரோயின்களை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இதனால், அவர்கள் தங்கள் ராசியை சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கில் ஹிட் கொடுத்த கிரித்தி ஷெட்டி, தெலுங்கில் இருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்ட ‘தி வாரியர்’, ‘கஸ்டடி’ ஆகிய படங்களின் மூலம் கோலிவுட்டில் முன்னணி நடிகையாகி விடலாம் என்று நம்பினார்.
ஆனால், அப்படங்கள் தோல்வி அடைந்ததால் அவரது ஆசை நிறைவேறவில்லை. தற்போது நடித்துள்ள ‘வா வாத்தியார்’, ‘ஜீனி’, ‘எல்ஐகே’ என்கிற ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஆகிய படங்களும் ரிலீசாவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. அதுபோல் தமிழில் ‘பூமி’, ‘ஈஸ்வரன்’, ‘கலகத் தலைவன்’ ஆகிய படங்களில் நடித்திருந்த நிதி அகர்வால், தெலுங்கில் நடித்த ‘ஹரிஹர வீர மல்லு’, ‘தி ராஜா சாப்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், அவரது ராசியை பற்றியும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதனால், இரு ஹீரோயின்களும் தங்கள் ராசியையே சந்தேகப்பட்டு, தமன்னாவை ேபால் தங்கள் பெயரில் மாற்றம் செய்யலாமா என்று யோசித்து வருகின்றனர்.
