ஏ.ஆர்.ரஹ்மான் 5 பாடல்களை பாடி இசை அமைத்து, ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இளம் கோபக்கார இயக்குனராக நடித்துள்ள படம், ‘மூன்வாக்’. இதில் நடித்தது குறித்து அவர் கூறுகையில், ‘கடந்த 1997ல் `வந்தே மாதரம்’ ஆல்பம் உருவானபோதே நடித்திருந்தேன். இந்த படத்தில் ஒரு சின்ன சீனில் நடித்துள்ளேன். எனக்கு ஹீரோயின் கிடையாது. வெறும் 10 நிமிடங்களில் நடித்து முடித்துவிட்டேன். இந்த உலகத்தின் ஐகான், பிரபுதேவா. இந்தியாவின் பெருமை என்று சொல்லப்படும் அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது அதிக மகிழ்ச்சி அளித்துள்ளது. எனக்கு புதிய யோசனைகள் வரவில்லை என்றால், அது ஒரு மகிழ்ச்சியான உணர்வுதான்.
உங்களின் கற்பனை ஆற்றல் வற்றியதாக தோன்றும்போது, வேறு என்ன செய்யலாம் என்பதை நோக்கி நகர்வீர்கள். ஒரு கிளாஸ் பாதி காலியாக இருப்பதாக பார்க்காமல், பாதி தண்ணீர் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். எப்போதும் நம்பிக்கையை கைவிடக்கூடாது’ என்றார். பிரபுதேவா கூறும்போது, ‘இந்த படத்தின் கதையை நான் கேட்கவே இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான் பெயரை சொன்ன மறுநிமிடம், நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இதில் ஒரு பாடல் காட்சியில் 30 நாட்கள் பயிற்சி பெற்றேன். நானும், ஏ.ஆர்.ரஹ்மானும் பல வருடங்கள் கழித்து இணையும் படம் என்பதால், நாங்கள் மரண அடி அடித்திருக்கிறோம்.
‘காதலன்’, ‘மிஸ்டர் ரோமியோ’ ஆகிய படங்களின்போது எங்களிடம் இருந்த வேகம் வேண்டும் என்பதற்காகவே விசேஷ பயிற்சி பெற்றேன். ஏ.ஆர்.ரஹ்மான் நடிக்கிறார் என்று இயக்குனர் சொன்னபோது, நிஜமாக நடிக்கிறாரா என்று நான் ஆச்சரியப்பட்டேன். படத்தில் எனக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சண்டை போடும் காட்சி இருக்கிறது. அதை தியேட்டரில் பாருங்கள், அதிர்ச்சி அடைவீர்கள்’ என்றார்.
