திருமலை: பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்த நடிகை நிதிஅகர்வாலிடம் அத்துமீறிய ரசிகர்கள் மீதும், அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்திய மால் மேலாளர்கள், நிர்வாகம் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் நடிகை நிதிஅகர்வால் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏற வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள், அவரை சூழ்ந்து கொண்டனர். அதில் ஒரு சில ரசிகர்கள், நிதிஅகர்வாலிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நிதிஅகர்வால், கடும் வேதனையுடன் அவர்களிடம் இருந்து வெளியேறி காரில் ஏறினார். இந்த சம்பவத்தால் நிதிஅகர்வால் காரில் கதறி அழுதுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. மேலும் ரசிகர்கள் அத்துமீறல் தொடர்பாக நிதி அகர்வால், சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்து பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் நிதி அகர்வாலிடம் ரசிகர்கள் அத்துமீறியதற்கான வீடியோ வைரலான நிலையில், இதுதொடர்பாக தானாக முன்வந்து ரசிகர்கள் மீது குகட்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணையில் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கும் எந்த அனுமதியும் பெறவில்லை என தெரியவந்தது. இதுதொடர்பாக வணிக வளாக அரங்கின் மேலாளர்கள் மற்றும் நிர்வாகத்தின் மீதும் போலீசார் தானாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் மீத நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
