ஹீரோயின்களை இடம் மாற்றிய சுதீப்

 

தமிழ் மற்றும் கன்னடத்தில் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப் நடித்துள்ள ‘மார்க்’ என்ற படம், வரும் 25ம் தேதி வெளியாகிறது. சென்னையில் நடந்த இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது மேடையின் ஓரத்தில் ஹீரோயின்கள் ‘வணங்கான்’ ரோஷிணி பிரகாஷ், தீப்ஷிகா அமர்ந்திருந்தனர். அதை பார்த்த ஒருவர், ‘மேடையில் ஓரமாக அமர்ந்திருக்கிறீர்களே. படத்திலும் அப்படித்தானா?’ என்று கேட்டார். அதற்கு ரோஷிணி பிரகாஷ் பதிலளிக்கும் முன்பு எழுந்த கிச்சா சுதீப், ‘இந்த கேள்வி படப்பிடிப்பில் ஒருநாள் கூட வந்தது இல்லை.

அதனால்தான் படம் நன்றாக வந்திருக்கிறது’ என்று சொல்லி, ஹீரோயின்கள் இருவரையும் மேடைக்கு நடுவில் அமர வைத்தார். மேடையில் வேண்டுமென்றே ஓரமாக அமர வைக்கவில்லை. அது தானாக அமைந்தது என்று சொன்ன அவர், ரோஷிணி பிரகாஷிடம் மைக்கை கொடுத்தார். இப்படத்தில் நடித்தது பற்றி அவர் சொல்ல, பிறகு மைக்கை வாங்கிய கிச்சா சுதீப், ‘கேள்வி கேட்ட நபர், முதலில் என்னிடம்தான் கேட்டார். ஓரமாக இருந்த ஹீரோயினை முதலில் பார்க்கவில்லை. கடைசியாகத்தான் அவரிடம் கேட்டார். முதல் கேள்வியை அவரிடம் நீங்கள் கேட்டிருந்தால், உங்களுக்கு சல்யூட் வைத்திருப்பேன்’ என்றார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

Related Stories: