சென்னை: ரெட் ப்ளூ ஸ்டுடியோஸ் சார்பில் ஜி. முத்துமனோகரன் தயாரிப்பில் இளையராஜா சி. இயக்கத்தில் கூல் சுரேஷ் நடிக்கும் ‘உள்ளே செல்லாதீர்கள்’ என்கிற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சந்தானம் வெளியிட்டுப் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.
பின்னர் சந்தானம் பேசும்போது, ‘‘கூல் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தைக் கேள்விப்படும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது அவர் கதாநாயகனாக நடித்துள்ள மூன்றாவது படம். ‘உள்ளே செல்லாதீர்கள்’ என்ற தலைப்பைப் பார்த்து விட்டு வேறு எதுவும் நினைக்காதீர்கள். படத்தை நம்பி உள்ளே சென்றால் சந்தோஷப்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன். பேய்க் கதைகளைப் படமாக எடுக்கும் போது மினிமம் கேரண்டி உள்ளது. எனவே அந்த வழியில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.
புதிய இயக்குனர் ,தயாரிப்பாளருக்கு எனது வாழ்த்துக்கள். இருபது வருடங்களுக்கு முன்பு டி.ஆர் சாரிடம் நாங்கள் இருவரும் ஆடிஷன் சென்றிருந்தோம். என்னை முதலில் மிருதங்கம் வாசிப்பது போல் நடிக்கச் சொன்னார். நான் சரியாக வாசிக்கவில்லை என்று விட்டுவிட்டார். இவர் (கூல் சுரேஷ்) சரியாக வாசித்தார். இவரை அவர் தேர்வு செய்து விட்டார். அப்படிப்பட்ட நண்பனுக்கு வாழ்த்துக்கள். அனைவரும் ஆதரவு கொடுங்கள்’’ என்றார்.
