சென்னை: கேரள அரசு பஸ்சில் நடிகர் திலீப் படம் திரையிடப்பட்டதற்கு பெண் பயணிகள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து எர்ணாகுளத்துக்கு அரசு பஸ் ஒன்று நேற்று புறப்பட்டது. இந்த பஸ்சில் திலீப் நடித்த ஈ பறக்கும் தளிகா என்ற மலையாள படம் டிவியில் திரையிட்டனர். அப்போது பஸ்சில் பயணித்த லட்சுமி சேகர் என்ற பெண், ‘இந்த படத்தை உடனே நிறுத்துங்கள்’ என்றார். திலீப் நடித்த படத்தை திரையிடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது சில ஆண்கள், இதில் என்ன தவறு இருக்கிறது என கேட்டதும், உடனே கோபம் அடைந்த பெண் பயணிகள், அந்த அம்மா (லட்சுமி சேகர்) சொல்வது சரிதான். திலீப் படத்தை போடக்கூடாது என பஸ் நடத்துனரிடம் முறையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த படம் நிறுத்தப்பட்டது. இது குறித்து போராட்டம் செய்த லட்சுமி சேகர் கூறும்போது, ‘‘சமீபத்தில் வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு நாங்கள் பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக இருக்கிறோம். அதனாலேயே இந்த ெசயலில் ஈடுபட்டோம்’’ என்றார்.
