பிரபு சாலமன் இயக்கத்தில், இமான் இசையில் கடந்த 2012ம் ஆண்டு வெளியாகி, மக்களிடம் வரவேற்பு பெற்ற படம், ‘கும்கி’. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் அறிமுகமானார்கள். ‘மைனா’ எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்தார். சமீபத்தில் அப்படத்தின் 2ம் பாகம் ‘கும்கி 2’ என்ற பெயரில் வெளியானது. 2016ம் ஆண்டிலேயே அப்படத்துக்கான பணிகளை தொடங்கிவிட்டனர். புதுமுகம் மதியை ஹீரோவாக அறிமுகம் செய்தார், பிரபு சாலமன். இந்நிலையில், வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திரைக்கு வரும் ‘சிறை’ என்ற படத்தில் நடித்துள்ள விக்ரம் பிரபு, ‘கும்கி 2’ படம் குறித்து கூறுகையில், ‘கடந்த 8 வருடங்களுக்கு முன்பே அப்படத்தை உருவாக்கிவிட்டனர். அந்த நேரத்திலேயே அப்படத்தை பற்றி என்னிடம் கேட்டனர்.
அவர்கள் குடும்பத்திற்குள்ளேயே படத்தை உருவாக்குவதாக என்னிடம் சொன்னார்கள். ஒரு படத்தை உருவாக்கி வெளியிட்ட பின்பு, மீண்டும் அதை தொட வேண்டுமா என்று எனக்குள் எப்போதும் ஒரு கேள்வி எழும். ‘கும்கி’ முதல் பாகத்திலேயே கதை முடிந்துவிட்டது. மறுபடியும் அதை தொட்டால் எப்படி உருவாகும் என்று எனக்கு தெரியவில்லை. அதுபற்றி பிரபு சாலமன் சார் என்னிடம் பேசவில்லை. நானும் அதுபற்றி எதுவும் கேட்கவில்லை. ‘கும்கி’ முதல் பாகத்தின் முடிவு அதுதான் என்று பிரபு சாலமன் சாரும், நானும் முடிவு செய்தோம். ‘கும்கி 2’ படத்துக்கும், எனக்கும் சம்பந்தம் கிடையாது. நான் ஷூட்டிங்கில் இருந்ததால், ‘கும்கி 2’ படத்தை இன்னும் பார்க்கவில்லை’ என்றார்.
