×

துபாய் யூடியூபருடன் சுனைனா ரகசிய காதல் திருமணம்? சோஷியல் மீடியா பதிவால் பரபரப்பு

சென்னை: நடிகை சுனைனாவும், துபாயை சேர்ந்த யூடியூப் பிரபலம் காலித் அல் அமேரியும் ரகசிய காதல் திருமணம் செய்துள்ளதாக தகவல் பரவியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த யூடியூப் பிரபலம் காலித் அல் அமேரி, கடந்த 6ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தநாள் பார்ட்டி நடந்தது. அப்போது எடுத்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு போட்டோவில் அவரும், நடிகை சுனைனாவும் கைகோர்த்தபடி நிற்கின்றனர்.

மற்றொரு போட்டோவில் அவர்களின் கைகள் மட்டும் தெரிகிறது. இந்த போட்டோக்களை திடீரென்று வெளியிட்டதன் மூலம், அவர்கள் தங்களின் காதல் உறவை உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பிறந்தநாள் பார்ட்டியில் காலித் அல் அமேரி வெட்டிய கேக், சுனைனா விசேஷமாக ஆர்டர் செய்தது. அந்த கேக் போட்டோ இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் அரபியில் அல்ஹம்துலில்லாஹ் (எல்லா புகழும் இறைவனுக்கே) என காலித் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இவர்களுக்கு ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டது என நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் காலித் அல் அமேரியை 3.2 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். மலையாளத்தில் ‘சாத்தா பச்சா: தி ரிங் ஆஃப் ரவுடிஸ்’ என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார். காலித் அல் அமேரி, சலாமா முகமது என்பவரை மணந்து பிறகு விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். தற்போது சுனைனாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், வெப்தொடர்களில் நடித்து வருகிறார்.

Tags : Sunaina ,Dubai ,Chennai ,YouTube ,Khalid Al Ameri ,United Arab Emirates ,Kochi, Kerala ,
× RELATED மரியா ஜூலியானா திடீர் திருமணம்