பாடகி சின்மயி மன்னிப்பு கேட்க வேண்டும்: ‘ரெட் லேபில்’ பட விழாவில் இயக்குநர் பேரரசு!

 

லெனின், அஸ்மின், ஆர்.வி.உதயகுமார், முனீஷ்காந்த், தருண், கெவின், கார்மேகம் சசி, அனுஷா நடித்திருக்கும் படம், ‘ரெட் லேபில்’. ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார். பொன். பார்த்திபன் கதை எழுதி இருக்கிறார். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்ய, கைலாஷ் மேனன் இசை அமைத்துள்ளார். கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார். இதன் இசை வெளியீட்டு விழாவில் பேரரசு, எஸ்.எழில், வசந்தபாலன், மித்ரன் ஆர்.ஜவஹர், அனுமோகன் பங்கேற்றனர். இவ்விழாவில் இயக்குனர் பேரரசு பேசுகையில் சமீபத்திய ‘‘ திரௌபதி 2’’ படத்தின் பாடல் பிரச்னைக்கு சின்மயி பதில் சர்ச்சையாகியிருக்கிறது. தற்போது இதனை அடிப்படையாகக் கொண்டு சின்மயிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இயக்குனர் பேரரசு.
ஒரு காலத்தில் கதை , கதாசிரியருக்கு முக்கியத்துவம் இருந்தது. கதையை வைத்துக்கொண்டு பிறகுதான் கதாநாயகர்களைத் தேடுவார்கள். ஸ்ரீதர், கே. பாலச்சந்தர், டி ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற இயக்குநர்களுக்குப் பிறகு கதை திரைக்கதை வசனம் என்று முழுமையாக அவர்களே பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
பிறகு கதை என்ன என்பதை விட, யார் கதாநாயகன் என்ற காலம் வந்தது. கதாநாயகர்கள் கதையை முடிவு செய்யும்படி ஆனது. இப்போது கதையை தயாரிப்பாளர் முடிவு செய்வதில்லை. கதாநாயகன் தான் முடிவு செய்வார்.

ஆனால் இந்தத் தயாரிப்பாளர் கதையைத் தேர்ந்தெடுத்ததற்குப் பாராட்டுகிறேன். அது படத்தின் மீது நம்பிக்கை தரும் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் இது முறையாக எடுக்கப்பட்ட படமாகத் தோன்றுகிறது. தயாரிப்பாளருக்குக் கதை பிடித்துவிட்டால் நம்பி ஒப்புக்கொண்ட பிறகு, இயக்குநரைத் தொந்தரவு செய்யக்கூடாது. அது சித்திரவதையாக மாறிவிடும். இயக்குநர் சுதந்திரமாக இருந்தால் தான் அந்தப் படைப்பு சரியாக வரும். இந்தப் படத்தில் பாடியுள்ள சின்மயி ஏன் இங்கே வரவில்லை? இயக்குநர் யார் என்று தெரிந்துதான் பாட்டு பாடினாரா? இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டி இருக்கிறது. சின்மயி ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் அவர் நடந்து கொண்டிருக்கிறார். தெரியாமல் பாடிவிட்டேன் என்கிறார் ,வருத்தம் தெரிவிக்கிறார். ஒரு படத்தில் பாடல் பாடும் போது என்ன சூழல்? என்ன வரிகள் என்பதைத் தெரிந்து கொண்டு தான் பாட வேண்டும். எல்லாமும் பாடி முடித்த பிறகு வியாபாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்துவது போல் நடந்து கொள்ளக் கூடாது.

ஒரு படத்தின் கேப்டன் இயக்குநர் தான். இயக்குநர் யார் என்று தெரியவில்லை என்று சொல்வதெல்லாம் தவறானதாகும். இந்தச் சின்மயி இப்படிச் சொல்வது அந்த இயக்குநருக்கு மட்டும் அவமானம் அல்ல. ஒவ்வொரு இயக்குநருக்கும் அவமானம். அதற்காக சின்மயிதான் மன்னிப்பு கேட்க வேண்டும். இன்று ஒரு படம் எடுப்பது என்றால் உயிர் போகிற விஷயமாக இருக்கிறது. எவ்வளவு சிரமப்பட்டு படம் எடுக்கிறார்கள் .ஆனால் சுலபமாக இப்படி இடையூறு செய்கிறார்கள் .எஸ் . ஜானகி, பி. சுசீலா போன்ற பாடகிகள் எவ்வளவு பெரிய பாடகிகள். இந்தத் திரையுலகில் அவர்கள் எல்லாவிதமான பாடல்களையும் பாடினார்கள்.அப்போதெல்லாம் இப்படியா நடந்தது? குறிப்பாக இயக்குநரை தயாரிப்பாளரை அவமானப்படுத்த உரிமை யாருக்கும் கிடையாது. பாடி முடித்து விமர்சனம் செய்வது தொந்தரவு தருவது தவறானதாகும்” என்றார்.

 

Related Stories: