பிரபல நடிகர், நடிகைகளை அவர்களது ரசிகர்களுடன் இணைக்கும் ‘ஃபேன்லி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற தனி செயலியை அறிமுகம் செய்த சிவகார்த்திகேயன் பேசுகையில், ‘எனக்கு மூளை குறைவு. அதனால்தான் என்னால் நடிகராக தொடர்ந்து நீடிக்க முடிகிறது. ஒருவேளை மூளை அதிகமாக இருந்திருந்தால், இயக்குனரை டார்ச்சர் செய்ய ஆரம்பத்திருப்பேன். இப்போது அவர்கள் சொல்வதை கேட்டு நடித்து வருகிறேன். எனக்கு எப்போதுமே என்னை வணங்கும் ரசிகர்கள் தேவையில்லை.
அவர்கள் கடவுளையும், தங்களுடைய அப்பா, அம்மாவையும் வணங்கினால் போதும். என்னுடன் அன்பாக பேசுவதையும், அண்ணனாக பழக வேண்டும் என்பதையுமே நான் ஆசைப்படுகிறேன். அதனால்தான் ரசிகர், ரசிகைகளை ‘தம்பி’, ‘தங்கை’ என்று அழைக்கிறேன். இப்போது சமூக வலைத்தளங்களை பார்த்தாலே அனைவருக்கும் பயம் ஏற்படுகிறது. அனைத்து சமூக வலைத்தளங்களிலும் எனது பெயரில் கணக்கு இருக்கிறது. அதை வேறொருவர் நிர்வகித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கம் அவ்வப்போது சென்று வந்தேன். அதிலும் அதிகமான தவறுகள் நடப்பதால், இப்போது அந்த பக்கமும் போவதில்லை. எதிர்மறை கருத்துகள் வைரலாகிறது என்பதால், அதையே பெரிதாக விளம்பரம் செய்கின்றனர். ஏதாவது பொய் சொல்வோம், அதைத்தான் நிறையபேர் பார்த்து ரசிக்கின்றனர் என்று பலர் நினைக்கின்றனர். அது தவறு’ என்றார்.
