×

கணம் படத்தை தாங்கும் அம்மா பாட்டு

அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கும் படம் கணம். அமலா, சர்வானந்த், ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘எங்கேயும் எப்போதும்’,‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ ஆகிய படங்களுக்குப் பிறகு தமிழில் சர்வானந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெறும் அம்மா பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த அம்மா பாடல்தான் படத்திற்கு ஆதார ஸ்ருதி என்கிறார் இயக்குனர் ஸ்ரீகார்த்திக் அவர் மேலும் கூறியதாவது: அம்மா பாடல்தான் கணம் படத்தின் ஆன்மா. இது கதையை மேம்படுத்தும் பாடல் மட்டுமல்ல, இந்தப் பாடல் தான்.. இந்தப் படம். ஒரு வகையில் இந்தப் படத்தின் முதுகெலும்பு என்று சொல்வேன்.

3 வருடங்களுக்கு முன்பு, இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னரே இந்தப் பாடலை உருவாக்கினோம். இந்தப் பாடலை முடித்தவுடனேயே இது கதையின் தன்மையை இன்னும் சிறப்பானதாக ஆக்குவதை உணர்ந்தோம். இந்த பாடலை கேட்ட பிறகுதான், அடுத்து வரப்போகும் நாட்களில் எந்தப் பார்வையோடு  இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்பதை மொத்தக் குழுவும் அறிந்து கொண்டது. படப்பிடிப்பின் போது எல்லோரும் ஒரே நேர்கோட்டில் சிந்திக்க இந்த அம்மா பாடல் தான் உதவியது. தெலுங்கில், மறைந்த பாடலாசிரியர் ஸ்ரீவெண்ணெலா எழுதிய பாடலை தமிழுக்கு அப்படியே மாற்றவில்லை. பாடலின் அதே கருவை வைத்துத் தமிழில் மொத்தமாக புதிய வரிகளை உருவாக்கி இருக்கிறோம்.

‘மன்னன்’ படத்தில் வந்த ‘அம்மா என்றழைக்காத…’ ,‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் இடம்பெற்ற ‘அம்மா.. அம்மா..’ போன்ற  பாடல்களுக்குப் பிறகு இந்த அம்மா.. பாடல் அனைத்து வயதினரையும் கொண்டாட வைக்கும். அம்மாவை இழந்தவர்களுக்கு இந்தப் பாடல் ஒரு தாலாட்டாக இருக்கும். மற்றவர்களுக்கும் ஒரு நம்பிக்கை  தரும் பாடலாக இது இருக்கும் என்றார். இந்த படம் தெலுங்கில் ‘ஒகே ஒக ஜீவிதம்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!