சென்னை: ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், நேற்று முன்தினம் ஆட்டோவில் பயணித்த போது, கிடைத்த அனுபவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, ‘‘நான் மாஸ்க் அணிந்து கொண்டு ஒரு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அண்ணா (ஆட்டோ டிரைவர்) திடீரென்று யூடியூப்பில் ‘முகை மழை’ (‘டூரிஸ்ட் பேமிலி’ பட பாடல்) பாடலைப் போட்டார். என் முகம் உடனடியாக பிரகாசித்தது.
அவரிடம் படம் பிடித்திருக்கிறதா என்று நான் கேட்டேன். அவர், உடனே ‘நான் டூரிஸ்ட் ஃபேமிலியை தியேட்டரில் மூன்று முறை பார்த்தேன். என் கைகளைப் பாருங்கள். இந்தப் படத்தைப் பற்றிப் பேசுவதே எனக்கு மெய்சிலிர்ப்பை தருகிறது. அதுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது’ என்றார். பின்னர் அவர் சசிகுமார் சாரின் கதாபாத்திரத்துடன் எவ்வாறு ஆழமாக இணைந்திருக்கிறார் என்பதைப் பற்றிப் பேசத் தொடங்கினார்.
குடும்பத்தின் எதிர்காலத்திற்காக கடுமையாகப் போராடிய தனது சொந்த தந்தையுடன் ஒப்பிட்டார். அவரது தந்தை இப்போது இல்லை, படத்தைப் பார்த்ததும் நினைவுகள் வந்ததாக, உணர்ச்சிவசப்பட்டு, கொஞ்சம் உடைந்து போனார். நான் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குனர் என்று அவரிடம் சொன்னபோது, அவர் மகிழ்ச்சியில் மூழ்கி, படத்தின் மீதான தனது அன்பை முழு மனதுடன் வெளிப்படுத்தினார்.
என்ன ஒரு தருணம்! உங்கள் சிறிய பங்களிப்பினால் ஒருவர் புன்னகைக்கிறார், குணமடைகிறார் அல்லது ஆழமாக உணர்கிறார் என்பதை நீங்கள் உணரும்போது அந்த வகையான மகிழ்ச்சி உண்மையிலேயே அளவிட முடியாதது” என்று அந்த ஆட்டோ ஓட்டுநருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார் அபிஷன் ஜீவிந்த்.