ராம் சரண் பட ஷூட்டிங்கில் வாட்டர் டேங்க் வெடித்து விபத்து: டெக்னீஷியன்கள் படுகாயம்

ஐதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் ‘தி இந்தியா ஹவுஸ்’. இப்படத்தை தனது ‘வி மேகா பிக்சர்ஸ்’ நிறுவனம் மூலம் வழங்குகிறார். இப்படத்தில் நிகில் சித்தார்த்தா நாயகனாக நடிக்க அனுபம் கெர், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராம் வம்சி இயக்கும் இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அப்போது கடல் பின்னணியில் நடக்கும் ஒரு ஆக்‌ஷன் காட்சியை படமாக்கியுள்ளனர். அதனால் கடல் போன்ற செட்டை போட்டு படமாக்கியுள்ளனர். அப்போது செட்டிற்காக அருகில் வைக்கப்பட்டிருந்த வாட்டர் டேங்க் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் படப்பிடிப்பு தளம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வாட்டர் டேங்கில் ஆயிரம் லிட்டர் தண்ணீர் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த தொழில்நுட்ப பொருட்கள் மற்றும் கடல் செட் சேதமடைந்துள்ளது. உதவி ஒளிப்பதிவாளர் ஒருவர் மற்றும் சில படக்குழு உறுப்பினர்கள் பலத்த காயமடைந்தனர். காயம்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

Related Stories: