ஜோடி இல்லை, டூயட் இல்லை என்றாலும், இயல்பான நடிப்பில் மனதை கவர்கிறார். ‘ஏஐ’யில் உருவான விஜயகாந்திடம் யானையை மீட்க அவர் உதவி கேட்கும் காட்சி உருக்கம். தந்தையாக கஸ்தூரிராஜா குணச்சித்திர நடிப்பில் அசத்தி இருக்கிறார். யதார்த்த வில்லன் லோகு, யானையை மதம் பிடிக்க வைக்கும் காகா கோபால், காட்டில் வசிக்கும் முனீஷ்காந்த், அருள்தாஸ், ரிஷி ரித்விக், யாமினி சந்தர், விலங்குகளை பலி கொடுக்கும் சாமியார் கருடா ராம், யூகி சேது, கால்நடை மருத்துவர் ஏ.வெங்கடேஷ் ஆகியோர், படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.
அடர்ந்த காடுகளையும், மலைகளையும், இயற்கை வளத்தையும் கேரக்டராக்கி கண்முன் நிறுத்திய ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதீஷ் குமாரின் பணி சிறப்பானது. மணியன் யானையின் கம்பீரத்தை திரைக்குள் கொண்டு வந்த விதம் அபாரம். இளையராஜா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அழுத்தமான பின்னணி இசையில் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளார். இயக்குனர் யு.அன்புவை பாராட்டலாம். மோசடியாளர்களை வழக்கம்போல் போலீசார் கண்டுகொள்ளாதது நெருடுகிறது.