ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘மதராஸி’ என்ற படத்தில் ருக்மணி வசந்த் ஜோடியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ என்ற படத்தில் ஸ்ரீலீலா ஜோடியாக நடித்து வருகிறார். முந்தைய படத்துக்கு அனிருத் இசை அமைக்க, அடுத்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இந்நிலையில், ‘தி கோட்’ என்ற படத்தில் விஜய்யை இயக்கியிருந்த வெங்கட் பிரபு, ‘மங்காத்தா’ என்ற படத்துக்கு பிறகு மீண்டும் தன்னை இயக்க அஜித் குமார் அழைப்பார் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைந்தார். எனவே, சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு கதை சொல்லியிருந்தார்.
இதையடுத்து அவர்களது காம்பினேஷனில் படம் உருவாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை சமீபத்தில் நடந்த விருது நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு வெளியிட்டார். இப்படம் டைம் டிராவல் கதைக்களத்தில் உருவாகிறது. இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். சிவகார்த்திகேயன் ஜோடியாக கயாடு லோஹர், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பதாக இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு ‘ஹீரோ’ என்ற படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். வெங்கட் பிரபு இயக்கிய ‘மாநாடு’ என்ற படத்தில் சிம்புவுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார்.
முதல்முறையாக சிவகார்த்திகேயன், கயாடு லோஹர் இணைந்து நடிக்கின்றனர். தற்போது தமிழில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்து எந்த ஹீரோயினுக்கும் கிடைக்கவில்லை. அதை எப்படியாவது அடைய வேண்டும் என்று கயாடு லோஹர் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறார். பிரதீப் ரங்கநாதன் காதலியாக ‘டிராகன்’ என்ற படத்தில் நடித்திருந்த அவர், பிறகு தனது ேசாஷியல் மீடியாவுக்காக தனி டீம் அமைத்து, அதற்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து போட்டோசெஷன் நடத்தி, நாள்தோறும் புதிய மற்றும் கவர்ச்சியான போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.